
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் உருவான செயல்பாட்டு நெருக்கடியைத் தொடர்ந்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. குளிர்கால அட்டவணையின் கீழ், இண்டிகோ தனது மொத்த விமான சேவைகளில் குறைந்தது 10 சதவீதம் குறைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் – இண்டிகோ இணங்காததால் பெரும் நெருக்கடி:
விமானி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணிநேரம், இடைவேளைகள், விடுப்புகள் உள்ளிட்ட நெறிமுறைகளை விமான போக்குவரத்து அமைச்சகம் புதிதாக திருத்தி, இது நவம்பர் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த புதிய நடைமுறைக்கு இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனமாக இருப்பது போதிலும், இண்டிகோ முழுமையாக இணங்கவில்லை என DGCA குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரமாக இண்டிகோ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
அனுமதி அளிக்கப்பட்ட பறப்புகள் – நடந்தது என்ன?
குளிர்கால அட்டவணை படி:
மொத்த வாராந்திர புறப்பாடுகள் – 15,014
அனுமதி அளிக்கப்பட்ட மொத்த பறப்புகள் – 64,346
இண்டிகோ இயக்கியவை – 59,438
ரத்து செய்யப்பட்ட பறப்புகள் – 951
கோடைக்காலத்தை விட 6% அதிகமான சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், நிறுவனம் அதனை நிர்வகிக்கத் தவறியதாக DGCA தெரிவித்துள்ளது.
10% சேவை குறைப்பு – திருத்தப்பட்ட அட்டவணை இன்று மாலை 5 மணிக்குள் DGCA வழங்கிய உத்தரவில்:
பெரும் பயணிகள் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாமல் கவனிக்க வேண்டும். குளிர்கால அட்டவணையில் 10% சேவை குறைப்பு அவசியம். புதிதாகத் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட அட்டவணையை இன்று மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடும் வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விளக்கம்: “சேவை மீண்டு வருகிறது”, இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார்: “இண்டிகோ இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எங்கள் குழு 24 மணி நேரமும் பணியாற்றுகிறது. பாதிக்கப்பட்ட பயணியரிடம் மன்னிப்புக் கோருகிறோம்.”
ஆனால், பயணிகள் நிலவரம் இன்னும் சீராகவில்லை என விமான நிலையங்களில் இருந்து தெரிகிறது. லோக்சபாவில் அமைச்சர் கண்டனம்: “முழுப்பொறுப்பு இண்டிகோவுக்கு” தொடர்ந்து லோக்சபாவில் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு:
“திட்டமிடலில் அலட்சியம் காட்டியதே இந்த நெருக்கடிக்குக் காரணம். பயணிகளுக்கு சிரமம் உண்டாக்கிய இண்டிகோ மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பயணியர் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லை.” என்றார்.
சென்னைக்கான பயங்கரவாத மிரட்டல் – புரளி என உறுதி: டில்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்துக்கு “உடலில் வெடிகுண்டுகளுடன் தற்கொலை படையினர் வரும்” என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் அது பொய்யான மிரட்டல் என உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் மட்டும் 41 விமானங்கள் ரத்து: சென்னை விமான நிலையத்தில் நேற்று:
புறப்பட வேண்டியவை – 18 விமானங்கள்
வர வேண்டியவை – 23 விமானங்கள்
மொத்தம் – 41 விமானங்கள் ரத்து
டில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சேவைகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இண்டிகோ செயல்பாட்டு சீர்கேடு இந்திய விமானப் போக்குவரத்து துறையில் சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய சேவை நெருக்கடியாக மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் கடுமையான உத்தரவுகளுக்கு பிறகு இண்டிகோ நிலை சீராகுமா? என்கிற கேள்விக்கு பயணிகள் பதில் எதிர்நோக்கி உள்ளனர்.
