Monday, July 7பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள்!

கடந்த 19ம் தேதி, பஞ்சாபின் லுாதியானா மேற்கு, கேரளாவின் நிலம்பூர், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச், குஜராத்தின் விசாவதர், காடி ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நிலம்பூர் இடைத்தேர்தல் பிரியங்கா பிரதிநிதித்துவப்படுத்தும் வயநாடு லோக்சபா தொகுதியின் ஒரு பகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஆர்யாதன் சவுகத், ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வேட்பாளர் எம்.ஸ்வராஜை, 11,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

லுாதியானா மேற்கு தொகுதியில், ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்பிரீத் பாசி கோகி தற்கொலை செய்ததை அடுத்து இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளரான ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யும், தொழிலதிபருமான சஞ்சீவ் அரோரா, 10,000 ஓட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தின் விசாவதர் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் கோபால் இத்தாலியா, பா.ஜ., வேட்பாளர் கிரித் படேலை தோற்கடித்துள்ளார். 75,942 ஓட்டுகளை பெற்ற கோபால் இத்தாலியா, கிரித் படேலை, 17,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

காடி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ஜ.க வின் சோங்கி மரணமடைந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் ராஜேந்திர சாவ்டா, மும்முனை போட்டி நிலவிய நிலையிலும், 39,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

நாடியா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் சட்டசபை தொகுதியில் திரிணமுல் காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த நசிருதீன் அகமது, கடந்த பிப்ரவரியில் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடந்தது. இதில், அவரது மகன் அலிபா அகமது, 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காளிகஞ்ச் தேர்தல் வெற்றி ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே மந்தமாக இருந்த ஆம் ஆத்மி, பஞ்சாபின் லுாதியானா மேற்கு, குஜராத்தின் விசாவதர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.