
பீஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் சர்ச்சைக்குரிய பேச்சு, இந்தியா – நேபாளம் இடையிலான உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகள் அடிக்கடி பல்வேறு கருத்துகளை வெளியிடுவது வழக்கமானது. ஆனால், சில சமயங்களில் அவர்கள் பேசும் வார்த்தைகள், நாட்டின் வெளிநாட்டு உறவுகளுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளது.
பா.ஜ. துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, “நேபாளம், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் அமைதி நிலைத்திருக்கும்; நேபாளம் தனி நாடாக ஆவதற்கு காங்கிரஸ் தான் காரணம்” என்று உரையாற்றினார். அவரது இந்தக் கருத்து, பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.
மோடியின் கொந்தளிப்பு:
இந்த உரையை கேட்ட பிரதமர் நரேந்திர மோடி கோபப்பட்டதாகக் கூறப்படுகிறது. “தேவையில்லாத விஷயங்களில், குறிப்பாக வெளிநாட்டு தொடர்புகளை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தும், துணை முதல்வர் ஏன் இப்படிப்பட்ட உரை ஆற்றினார்?” என மோடி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, மோடி “இனி யாரும் சமூக வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ நேபாளம் தொடர்பான கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. இது மிகவும் உணர்ச்சிவசப்படத்தக்க(சென்சிடிவ்) விஷயம்” எனக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த உத்தரவை உடனடியாக அனைவருக்கும் நட்டா அறிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தில் அரசியல் கலக்கம்:
சாம்ராட் சவுத்ரியின் உரையால் நேபாளத்தில் ஏற்கனவே பரபரப்பாக இருந்த சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்து, பலர் உயிரிழந்த நிலையில், நேபாளத்தின் பிரதமர் பதவி விலகினார். இப்போது, அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – நேபாளம் உறவு:
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாசார, சமூக மற்றும் மத உறவுகள் தொடர்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே 1,751 கிலோமீட்டர் நீள எல்லை பகிரப்பட்டுள்ளது. இதில் பீஹார் – நேபாள எல்லை மட்டும் 729 கிலோமீட்டர் நீளமாக உள்ளது. இரு நாடுகளின் மக்களும் திருமணம், வாணிபம் மற்றும் பிற சமூக தொடர்புகள் மூலம் இணைந்துள்ளனர். மேலும், மொழியிலும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
தேர்தல் முன்னோட்டத்தில் சர்ச்சை:
பீஹார் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், துணை முதல்வரின் சர்ச்சையான பேச்சு கட்சிக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இதனால் தான் பிரதமர் மோடி உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.