Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அனில் அம்பானி மீது பெரும் பண மோசடி வழக்கு: சிபிஐ, அமலாக்கத்துறை தீவிர நடவடிக்கை!

தொழிலதிபர் அனில் அம்பானி மீது பெரும் அளவில் பண மோசடி மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி – இரு வழக்குகள் பதிவு:
சமீபத்திய விசாரணைகளின் போது, அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத்துறை (ED) தனி வழக்கை பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.

35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை:
கடந்த மாதம், மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவங்களுடன் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில், வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை விரிவான சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிமாற்றம் தொடர்பான ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை:
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ரூ.2,796 கோடி மதிப்பிலான நிதி முறைகேடு தொடர்பான தனி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் யெஸ் வங்கியிலிருந்து தவறான முறையில் கடனுதவி பெற்றது, பணப் பரிமாற்றத்தில் விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து நடவடிக்கை:
இந்த வழக்குகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. அனில் அம்பானியின் நிறுவனங்களின் நிதி பரிமாற்றம், வெளிநாட்டு முதலீடு மற்றும் கடன் பயன்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன.