
உலகளாவிய அளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதன் தாக்கமாக, இந்தியாவில் விமான டிக்கெட் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. குறிப்பாக உள்நாட்டு மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணங்களில் இந்த உயர்வு தெளிவாகக் காணப்படுகிறது.
உலகளாவிய காரணங்கள்:
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. இதன் நேரடி விளைவாக விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) விலையும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகள் உயர்ந்துள்ளன. உலகளவில் பல விமான நிறுவனங்கள் எரிபொருள் செலவு உயர்வை சமாளிக்க டிக்கெட் கட்டணங்களையும், ‘ஃப்யூயல் சர்சார்ஜ்’ கட்டணங்களையும் உயர்த்தி வருகின்றன.
இந்தியாவில் கட்டண உயர்வு:
இந்த நிலையில், இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா போன்றவை ஏற்கனவே சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. தற்போது உள்நாட்டு விமானங்களிலும் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் மட்டுமின்றி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கும் இடையிலான பயணங்களிலும் டிக்கெட் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும், சில நிறுவனங்கள் எரிபொருள் கட்டணத்தை தனியாக வசூலிக்கும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளன. உதாரணமாக, சில விமானங்களில் பயண தூரத்தைப் பொறுத்து கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
பயணிகள் மீது தாக்கம்:
- – முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- – போர்டிங் பாஸ்’ பெறும் முன் கூட கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை.
- – குறைந்த பயணிகள் உள்ள வழித்தடங்களில் கட்டண உயர்வு அதிகம்.
விமான நிறுவனங்கள் கூறுவதாவது, சில வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், செலவுகளை ஈடு செய்ய கட்டண உயர்வு அவசியமாகியுள்ளது.
எதிர்கால நிலை:
எரிபொருள் விலை மேலும் உயர்ந்தால், விமான டிக்கெட் கட்டணங்களும் தொடர்ந்து உயரக்கூடும் என விமானத் துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை சீராகும் வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
