Wednesday, August 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆடிப்பெருக்கு: மக்கள் புனித நீராடி வழிபாடு!

ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். மக்கள், குறிப்பாக புது மணத்தம்பதிகள் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் படையலிட்டு, காவிரி அன்னையை பெண்கள் வழிப்பட்டனர். புதிய மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர். இது போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரைகளில் மக்கள் பூஜை செய்தனர். தம்பதிகள் மஞ்சள் கயிறு , புது தாலி மாற்றி கொண்டனர். அரிசி, பழம், பால் என படையலிட்டு பூஜை நடத்தினர்.

ஆடி மாதம் 18ம் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளை தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரை போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளை தேர்ந்தெடுத்தனர். இந்த விழா தற்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம்.

இந்த நாளில் தேங்காயில் துளையிட்டு அதில் வெல்லம் பருப்பு தானியங்கள் சேர்த்து நெருப்பிலிட்டு வேகவைத்து சுவாமிக்கு படையல் வைப்பர். கருப்பண்ண சுவாமி , கன்னிமார் தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வது இல்லை. ஆனால் ஆடிப்பெருக்கு அன்று புதிய வியாபாரம் துவங்குவர். ஆடி பெருக்கை முன்னிட்டு தாலி பெருக்கி கட்டுதல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, வளையல் வழங்கும் நிகழ்வும் இந்த நாளில் நடக்கும்.