கனமழை எச்சரிக்கையினால், மயிலாடுதுறையில் இன்று (டிசம்பர் 11) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகைக்கு அருகே கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. மாலை நிலவரப்படி, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் நகர்வு மெதுவாக இருப்பதால், புயலாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.
இதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் இன்று மிதமான மழை, இடியுடன் பெய்யும் வாய்ப்பு உள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கும் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.