Sunday, November 29பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஏமன் கடற்கரை அருகே கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் – பின்பு வெளியேறிய கடத்தல்காரர்கள்!

ஏமன் கடற்கரை அருகே சனிக்கிழமை (நவம்பர் 28) சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றிய ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேறியுள்ளதாகவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஏமனின் பால்ஹாஃப் (Balhaf) பகுதிக்கு தென்மேற்கே 64 கடல் மைல் தொலைவில், ஏடன் வளைகுடாவில் நிகழ்ந்துள்ளது.

ஆரம்பத்தில், ஆயுதமேந்திய நபர்கள் சரக்குக் கப்பலில் ஏறி அதைக் கைப்பற்றியதாக கப்பலின் கேப்டன் தெரிவித்ததை UKMTO உறுதிப்படுத்தியிருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிந்தைய அறிவிப்பில், கப்பலைக் கைப்பற்றியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், கப்பல் தனது அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கடல்சார் பாதுகாப்பு முகமை உறுதிப்படுத்தியது.

UKMTO-வின் தகவல்படி, ஏமனின் பால்ஹாஃப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் (70 மைல்) தொலைவில் தாக்குதல் நடத்தியவர்கள் கப்பலுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த ஓராண்டாக ‘சோமாலி தீபகற்பம்’ (Horn of Africa) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையில், பிப்ரவரி மாதம் ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், அரேபிய தீபகற்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கப்பல்கள் அடிக்கடி மோதல்களுக்கு இடையே சிக்கிக்கொள்கின்றன.

முன்னதாக, ஏமனின் பால்ஹாஃப் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 64 கடல் மைல் (119 கி.மீ) தொலைவில், ஆயுதமேந்திய நபர்கள் கப்பலில் ஏறி அதைக் கைப்பற்றியதாக கப்பலின் கேப்டன் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் (UKMTO) தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாப்-எல்-மண்டேப் நீரிணை (Bab el-Mandeb Strait) வழியாக செங்கடலுடன் இணையும் ஏடன் வளைகுடா, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையாகும். சமீபத்திய மாதங்களில், இந்த வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன அல்லது கடத்தப்பட்டுள்ளன.