
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், வால்மார்ட் கடை ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மற்றும் அவரது 24 வயது தோழி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இதற்கும் குற்றச் செயல்கள் கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கனடிய புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.
உயிரிழந்தவர்கள் டெல்டா பகுதியைச் சேர்ந்த ககன்ப்ரீத் (கேரி) ரேஹல் (23) மற்றும் அவரது தோழி சுக்ப்ரீத் கௌர் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நவம்பர் 15-ம் தேதி இரவு நிகழ்ந்தது; மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
88 அவென்யூ மற்றும் 124 ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகில் உள்ள வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில், ஒரு ஆணும் பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினரும் மருத்துவக் குழுவினரும் இரவு 10:38 மணியளவில் (உள்ளூர் நேரம்) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சென்ற மீட்புக் குழுவினர், வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில் ஜன்னல்கள் உடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிவப்பு நிற ‘மஸ்டாங்’ (Mustang) ரக காரைக் கண்டறிந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட அந்த இளைஞரையும் பெண்ணையும் காப்பாற்ற முயற்சித்தனர், ஆனால் பலனளிக்கவில்லை. “பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்” என்று சர்ரே காவல் சேவை (Surrey Police Service) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கினைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (Integrated Homicide Investigation Team – IHIT) பொறுப்பேற்றுள்ளது. இந்த இரட்டைக் கொலை, திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இது organised crime எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்றும் புலனாய்வாளர்கள் கருதுவதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
IHIT-ன் சார்ஜென்ட் ஃபிரெடா ஃபாங் (Sergeant Freda Fong) கூறுகையில், ரீஹால் (Rehal) என்பவர் ஏற்கனவே ஆயுதங்கள் தொடர்பான குற்றங்களுக்காகக் காவல்துறையினருக்குத் தெரிந்தவர் என்றும், கௌர் (Kaur) என்பவருக்கு “கனடாவில் மிகக் குறைவான தொடர்புகளே இருந்தன” என்றும் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, இரவு 10:51 மணியளவில், பிரின்சஸ் டிரைவ் (Princess Drive) பகுதியில் 9700 பிளாக் (block) என்ற இடத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதாக அவசரக்கால குழுவினருக்குத் தகவல் கிடைத்தது.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனம் இதுவாகத்தான் இருக்கும் என்று IHIT கருதுகிறது. இந்த எரிந்த கார், தம்பதியினர் மீதான இந்த கொடிய தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் விசாரணையில் ஒரு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
23 வயது இளைஞனின் தந்தை கூறுகையில், தனது மகன் இந்த துயரச் சம்பவம் நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் வீட்டிலிருந்து கிளம்பினான் என்று தெரிவித்தார். மேலும், கௌர் தனது மகனின் காதலி என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
“என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை, என் மகனை இழந்துவிட்டேன். நான் ஒரு லாரி ஓட்டுநர்; கால்கரியிலிருந்து (Calgary) திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்தது. இப்போது என் மகன் இல்லை என்று சொல்கிறார்கள்,” என்று அந்தத் தந்தை மிகுந்த துயரத்துடன் கூறினார்.
இருவருமே டெல்டா (Delta) பகுதியில் வசிக்கும் தெற்காசிய வம்சாவளியினர் என்று காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. குற்றச் நடந்த இடத்தைப் புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து ஆதாரங்களைச் சேகரித்து வருவதால், வால்மார்ட் (Walmart) வாகன நிறுத்துமிடம் தொடர்ந்து காவல்துறையின் கட்டுப்பாட்டில் (cordoned off) வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலைச் சம்பவம் மற்றும் வாகன எரிப்புச் சம்பவம் குறித்து IHIT மற்றும் சர்ரே காவல் சேவை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எரிந்த வாகனம், சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் என்று IHIT-ன் சார்ஜென்ட் ஃபிரெடா ஃபாங் தெரிவித்தார். “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், இரு குடும்பங்கள் மிக இளம் வயதிலேயே தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளன,” என்று ஃபாங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
