Wednesday, November 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி – தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கடும் எச்சரிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டாலோ, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்சிப் பதவி பறிக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விஜய் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்.

குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்காக யாரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ, ஆணவத்துடன் நடந்துகொள்ளவோ கூடாது என அவர் எச்சரித்திருந்தார்.

‘நாம் ஜெயித்துவிட்டோம், இனி ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என்று யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே மறந்துவிடுங்கள்’ என்ற தொனியில் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கியிருந்தார்.

இதற்கிடையே, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை முன்வைத்து எதிர்க்கட்சியினரும் தவெக அரசை விமர்சித்து வருகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே சர்ச்சைகளில் சிக்குவது கட்சியின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சூழலில், கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மாற்றத்திற்காகவே மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் இந்த வெற்றியை வழங்கியுள்ளனர்.

எனவே, கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிர்வாகிகள் தங்களுக்கான பதவிகளையோ, தனிப்பட்ட ஆதாயங்களையோ எதிர்பார்த்துச் செயல்படக் கூடாது. நிர்வாகிகள் எதிர்பார்க்காதவற்றைக்கூட உரிய நேரத்தில் கட்சித் தலைவர் வழங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி நிர்வாகிகள் யாரேனும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, கட்சியின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலோ அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமை எச்சரித்துள்ளது.

குறிப்பாக, பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் சமீபகாலமாகப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கட்சித் தலைவரின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாராவது நடந்துகொண்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் பதவிகள் பறிக்கப்படுவதுடன், கூடுதல் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தலைமை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சியின் நிர்வாகிகள் மீதான கட்டுப்பாடுகளைத் தவெக தலைமை தீவிரப்படுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.