
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அளித்துள்ளார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும், 2029 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகவும் முழுநேரமாகப் பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்தைத் தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகக் கருதுவதாக எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தற்போது தமிழகத்திற்குத் திரும்பி, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து நேரடியாகக் களப்பணிகளில் ஈடுபட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, மத்திய இணையமைச்சர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கும் அனுமதி அளிக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளார். தனது கடிதத்தின் விவரங்களையும் அவர் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
எல். முருகனின் இந்த முடிவுக்குப் பின்னால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவது அவரது முக்கிய இலக்காக உள்ளது.
தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள், தெருக்கள் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்கவும், கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி முன்னெடுத்து வரும் ‘அனைவருடனும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை’ என்ற கொள்கைச் செய்தியைத் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
