Monday, October 12பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ரூ.5,110 கோடியைக் கேட்ட தமிழக முதல்வர்!

‘‘தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள ரயில்வே, சாலை திட்டங்களுக்கு, மத்திய அரசு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அத்துடன், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, 5,110 கோடி ரூபாய் கல்வி நிதியை, எந்தவித நிபந்தனைகளும் இன்றி, உடனடியாக விடுக்க வேண்டும்,’’ என, பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில், 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா, சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி, முதல்வர் விஜயின் கையைப் பிடித்து அழைத்து, இருவரும் இணைந்து திட்டங்களை தொடங்கி வைத்தனர். விழாவில், முதல்வர் விஜய் பேசியதாவது:

“சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழக அரசு வெளிப்படை தன்மை கொண்ட, அனைவருக்குமான அரசாக செயல்படுகிறது. அரசியல் சூழலை மாற்றி அமைத்து, ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கி, 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.”

“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து, கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை இலக்காக வைத்து, தமிழக அரசு செயல்படுகிறது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு, தொடர்ந்து பங்களிப்பு வழங்கி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. வலிமையான மாநிலம், வலிமையான இந்தியாவை உருவாக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழகம் அடித்தளமாக அமைந்துள்ளது.”

“மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும் போது, அதன் பலன் நேரடியாக, மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே, நமது அணுகுமுறை. தமிழகம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, 2036ல், 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி, வேளாண், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை என, பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது.”

“வளர்ச்சியின் பலன், சென்னை மாநகரத்தை தாண்டி, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். இளைஞர்கள், நமது மிகப்பெரிய பலம். அவர்களின் திறமை, தொழில்நுட்ப அறிவு, புதுமை சிந்தனை போன்றவற்றை, உலக அளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே, நம்முடைய இலக்கு.”

“இன்று நாம் தொடங்கும், நிறைவேற்றும் திட்டங்கள், அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும். சென்னை மெட்ரோ ரயில், மூன்றாம் கட்ட திட்டமான, 65 கி.மீ., துாரம் உடைய, சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ; பூந்தமல்லி – சுங்குவாச்சத்திரம்; கோயம்பேடு – பட்டாபிராம் திட்டங்களுக்கு, மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். அதேபோல, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரைகளை, மறு ஆய்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.”

“மாநிலங்களுக்கு இடையிலான, ஓசூர் – பொம்மசந்திரா மெட்ரோ ரயில் திட்டத்துக்கும், விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும். மத்திய அரசின், 2026 பட்ஜெட்டில், பெங்களூரு – ஹைதராபாத் – சென்னை இடையே, இரண்டு அதிவிரைவு ரயில் தடம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள், அந்த பகுதிகளுக்கு, மிகுந்த பயனளிக்கும். இதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

“அதேபோல, சென்னை – கன்னியாகுமரி; சென்னை – கோவை வரை அதிவிரைவு ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும். திருச்சி – செங்கல்பட்டு ஆறு வழிச்சாலை திட்டம்; திருச்சி பஞ்சப்பூர் – கரூர் ஆறு வழிச்சாலை திட்டம்; கரூர் – கோவை ஆறு வழிச்சாலை திட்டம்; மாதவரம் – சோழவரம் மேம்பால வழித்தடம் போன்றவற்றுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இவற்றால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.”

“மாநிலங்களுக்கு தேவையான நீர் கிடைக்க, நதி நீர் இணைப்பு அவசியம். கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்பு திட்டம், தென்மாநிலங்களின் நீர் தேவைகளுக்கு அவசியமானது. இதை, தேசிய திட்டமாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக, தமிழ் மொழி இருக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.”

“அதேபோல, தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, நிலுவையில் உள்ள, 5,110 கோடி ரூபாய் தொகையை, எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.” இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

முதல்வர் பேசி முடித்தவுடன் பிரதமர் எழுந்து, அவரது கையை பிடித்து வாழ்த்தினார்.