
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது. கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் நாடு தழுவிய போராட்டமும், டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற தர்ணா போராட்டமும் நடத்தப்படும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், CJP தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் “தேர்தல் ஆணையத்தை சரிசெய்” என்ற பிரசாரத்தையும் தொடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம்?
SIR நடவடிக்கையின்போது 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக CJP குற்றம்சாட்டியுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 13 முதல் 14 சதவீதம் வரை இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 2 கோடிக்கும் அதிகமான பெயர்களும், கர்நாடகாவில் சுமார் 1 கோடியும், தமிழ்நாட்டில் 97 லட்சமும், மேற்கு வங்கத்தில் 90 லட்சமும், தெலங்கானாவில் 73 லட்சமும், டெல்லியில் 47 லட்சமும், கேரளாவில் 24 லட்சமும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக CJP சுட்டிக்காட்டியுள்ளது. “ஜனநாயகம் என்பது மக்கள் தங்களது அரசைத் தேர்ந்தெடுப்பதாகும். ஆனால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படையையே பாதிக்கிறது” என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை மீண்டும் சேர்ப்பதற்கான மறுபரிசீலனை நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் போதிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புகள் குறித்து கேள்வி
வாக்காளர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளை மையப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாத காலத்தில் குறைந்தது 14 முறை தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட செய்தியை CJP மேற்கோள் காட்டியுள்ளது. இந்த எதிர்ப்புகள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அவை ஆணையத்தின் உள்புற முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்புப் பதிவுகள் மற்றும் அதற்கு ஆணையம் அளித்த பதில்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என CJP கோரியுள்ளது.
படிவம் 6 நடைமுறை குறித்தும் எதிர்ப்பு
புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் படிவம் 6-ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் CJP கேள்வி எழுப்பியுள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள், முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் தங்களது அல்லது பெற்றோரின் விவரங்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் வகையில் கூடுதல் உறுதிமொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பகுதி அதிகாரப்பூர்வமாக கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதற்கான தகவலை வழங்காமல் விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாக CJP குற்றம்சாட்டியுள்ளது. இந்த மாற்றம் முதல்முறை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் CJP கூறியுள்ளது.
மேற்கு வங்க வழக்குகளில் வெளிப்படைத்தன்மை கோரிக்கை
மேற்கு வங்கத்தில் SIR நடவடிக்கையைத் தொடர்ந்து உருவான வழக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் மேல்முறையீடுகள் மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என CJP வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்குகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் சுதந்திரமாக ஆய்வு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
வாக்காளர் தரவு மையப்படுத்தல் குறித்தும் கேள்வி
வாக்காளர் பட்டியல் தரவுகளை மையப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் CJP கவலை தெரிவித்துள்ளது.
மையப்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளுக்கான அணுகல் தொடர்பாக சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தெரிவித்ததாகக் கூறப்படும் எதிர்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. “வாக்காளர் பதிவு, பெயர் நீக்கம் மற்றும் தரவு அணுகல் தொடர்பான முக்கிய மாற்றங்கள் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்றன என்பதை விளக்காமல், குடிமக்கள் தேர்தல் அமைப்பை நம்ப வேண்டும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்க முடியாது” என்று சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
மூன்று முக்கியக் கோரிக்கைகள்
SIR நடவடிக்கை தொடர்பாக CJP மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
1. ஞானேஷ் குமார் ராஜினாமா மற்றும் சுதந்திர விசாரணை:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். SIR நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. வாக்காளர் பெயர் நீக்கத்தை நிறுத்துதல்:
SIR தொடர்பான கூடுதல் வாக்காளர் பெயர் நீக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். சரிபார்ப்பு நிறைவடையும் வரை ஜனவரி 2025 வாக்காளர் பட்டியலை மீண்டும் நடைமுறையில் வைத்திருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய அனைத்து பதிவுகளையும் பாதுகாத்து, உச்ச நீதிமன்றம் அல்லது நீதிமன்ற மேற்பார்வையிலான சுதந்திர விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
3. தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையில் மாற்றம்:
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை ஒழுங்குபடுத்தும் 2023-ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்து, அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பரந்த பங்கேற்புடன் கூடிய புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.
இதனிடையே, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது எதிர்ப்புகள் தொடர்பாக பகிரங்க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் CJP வலியுறுத்தியுள்ளது.
48 மணி நேரத்திற்குள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள CJP, அது நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தையும், டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தையும் முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
