Friday, September 4பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அமெரிக்காவில் ஹெச்-4(H-4) விசா வைத்திருப்பவர்கள் பணி புரியும் உரிமைக்கு ஆபத்து?

H-4 விசா என்பது அமெரிக்காவில் H-1B விசாக்களில் பணிபுரிபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடன் சென்று வசிக்க அனுமதிக்கும் ஒரு சார்பு (Dependent) விசாவாகும். முதன்மை விசா வைத்திருப்பவரின் (H-1B) விசா காலம் எவ்வளவோ, அதே காலம் வரை H-4 விசாதாரர்களும் அமெரிக்காவில் தங்கலாம்.

ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் நபர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், ஹெச்-4 விசா மூலம் அமெரிக்காவில் வசித்து வருவதுடன், குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் வேலை செய்வதற்கான அனுமதியையும் பெற்று பணி புரிந்து வருகின்றனர்.இந்த வேலைவாய்ப்பு உரிமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் வருமானத்தில் நேரடி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஹெச்-4 விசா வேலை உரிமையை ரத்து செய்ய திட்டம்:
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் குறிப்பிட்ட ஹெச்-4 சார்ந்த துணைவர்களுக்கு வேலைவாய்ப்பு அனுமதி வழங்கும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அரசின் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பான Reginfo.gov இணையதளத்தில் இடம்பெற்றுள்ள இந்த முன்மொழிவு, RIN 1615-AD14 என்ற ஒழுங்குமுறை எண்ணின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வேலைவாய்ப்பு அனுமதி பெற தகுதியுடைய அமெரிக்கர் அல்லாதோரின் பிரிவிலிருந்து குறிப்பிட்ட ஹெச்-4 சார்ந்த துணைவர்களை நீக்கும் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த முன்மொழிவு தொடர்பான அதிகாரப்பூர்வ விதிமுறை இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அது எப்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என்பதற்கான உறுதியான தேதியும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.

ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் சில துணைவர்களுக்கு அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய முக்கிய மாற்றம் கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள், Employment Authorization Document (EAD) எனப்படும் வேலைவாய்ப்பு அனுமதி ஆவணத்திற்கு விண்ணப்பித்து பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றனர்.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த 2015-ம் ஆண்டு கொள்கை மாற்றம் திரும்பப் பெறப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அனுமதி வழங்கிய விதிமுறை ரத்து செய்யப்பட்டு, ஹெச்-4 சார்ந்த துணைவர்கள் தனியாக வேலை செய்ய அனுமதிக்காத முந்தைய கொள்கை மீண்டும் கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியிருப்பது ஒரு முன்மொழியப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கை மட்டுமே. எனவே, ஹெச்-4 விசா வைத்திருக்கும் அனைவரின் வேலை உரிமையும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது. இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, அதற்கான விதிமுறை செயல்பாட்டுக்கு வரும் வரை தற்போதைய நடைமுறைகள் தொடரும்.

அமெரிக்க அரசு இறுதி விதிமுறையை வெளியிட்ட பின்னர், அதில் யார் பாதிக்கப்படுவார்கள், ஏற்கனவே EAD பெற்றிருப்பவர்களின் நிலை என்ன, புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பிப்புகள் எவ்வாறு கையாளப்படும் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகும்.