Monday, August 31பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அறப்போர் இயக்கத்தின் முறைகேடு புகாரைத் தொடர்ந்து 21 டெண்டர்கள் ரத்து!

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளி (Limited Tender) நடைமுறை மற்றும் கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிப்பதன் அவசியம் குறித்து அறப்போர் இயக்கம் எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, 21 ஒப்பந்தப்புள்ளிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு டெண்டரும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புடையதாகக் கூறப்படும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது.

அதேவேளையில், நெடுஞ்சாலைத் துறையின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் வெளிப்படையான திறந்த ஆன்லைன் முறையில் வெளியிடப்பட வேண்டும் என்றும், இதற்கான சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

பொதுப் போட்டிக்கு வாய்ப்பளிக்கும் வகையில் திறந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் வகையில் டெண்டர் நடைமுறை ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது? என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியது. இதுபோன்ற நடைமுறை தொடர்ந்தால், துறை சார்ந்த சில அதிகாரிகள் அல்லது பொறியாளர்களுக்கு விருப்பமான ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு தனது குற்றச்சாட்டை முன்வைத்தது.

இந்த டெண்டர்களின் பின்னணியில் முன்மொழியப்பட்டிருந்த தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் குறித்தும் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியது. கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்கள் உண்மையிலேயே தேவையா என்பதை முதலில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது. தேவையற்ற பணியிடங்களை உருவாக்கி அதற்காக ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிடுவது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுதொடர்பாக முழுமையான ஆய்வு அவசியம் என்றும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 21 கட்டுப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளையும் ரத்து செய்து, தேவையிருந்தால் அவற்றை திறந்த ஆன்லைன் டெண்டர் முறையில் மீண்டும் வெளியிட வேண்டும் என அறப்போர் இயக்கம் அரசிடம் வலியுறுத்தியது. மேலும், கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்கள் உண்மையில் தேவையா என்பதையும் அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த 21 ஒப்பந்தப்புள்ளிகளும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அறப்போர் இயக்கம், இதுபோன்ற விவகாரங்களை தொடர்ந்து கண்காணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.