Monday, August 31பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நேபாளம் : போட்டே கோஷி ஆற்றில் வெள்ள புதிய அபாய எச்சரிக்கை!

போட்டே கோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் நேபாளம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) தெரிவித்துள்ளது.

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 781-ஆக உயர்ந்துள்ளது; மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து இதுவரை 227 வெளிநாட்டினர் உட்பட 8,186 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக NDRRMA தெரிவித்துள்ளது. பேரிடரைத் தொடர்ந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 149 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றில், முன்னதாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்த சுமார் 50 இந்தியர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 275 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆனால் பிற நாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 128 பேரும் காணாமல் போயுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமயமலை நாடான நேபாளத்தில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா 68.5 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ தொழில்நுட்பக் குழுக்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் உபகரணங்களையும் அனுப்பியுள்ளது. 11 டன் நிவாரணப் பொருட்களுடன் நான்காவது விமானம் இன்று நேபாளத்தை வந்தடைந்தது.

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர சுகாதார மற்றும் பிற தேவைகளை ஆதரிப்பதற்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) தனது அவசர நிதியிலிருந்து 1,50,000 அமெரிக்க டாலர்களை விடுவித்துள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்பு முயற்சிகளின் மூலம் நேபாளத்திற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ள நிலையில், இந்த அவசர நிதியானது உடனடி முன்னுரிமை நடவடிக்கைகளுக்கு உதவும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.