
தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறையைத் தவிர்க்கும் நோக்கில், பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்தில் சாலை, பாலம், தொழிற்பேட்டை, வீட்டு வசதித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜல்லி, கட்டுமானக் கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்-சாண்ட் (M-Sand), மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள், ஹேண்ட் சக்காய்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பொருட்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுவதால் தட்டுப்பாடு:
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுவதால், மாநிலத்திற்குள் கட்டுமானப் பொருட்களின் இருப்பு குறைந்து வருவதாக அரசின் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு உருவாகி, கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதோடு, அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வீட்டு வசதி திட்டங்கள், சாலைப் பணிகள், தொழிற்சாலை கட்டுமானங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு பணிகள் தேவையான அளவு கட்டுமானப் பொருட்கள் கிடைக்காததால் தாமதமடையும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அரசு கவலை தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்களால் சாலைகள் சேதம்; விபத்துகளும் அதிகரிப்பு:
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மல்டி-ஆக்சில் கனரக வாகனங்கள் தமிழக சாலைகளை கடுமையாக சேதப்படுத்துவதாகவும், இதனால் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதோடு, சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கட்டுமானக் கற்களுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு இல்லாத நிலையிலும், தமிழகத்தில் இருந்து அதிகளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவது மாநிலத்தின் தேவைக்கும் கிடைக்கும் அளவுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு வாய்ப்பு:
தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உருவாகும் இந்த இடைவெளி, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் அதிகரிக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படவும் காரணமாக இருப்பதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மாநிலத்தின் சூழலியல் சமநிலைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலுக்கு விலக்கு:
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைத் தவிர்த்து, பிற அனைத்து மாநிலங்களுக்கும் ஜல்லி, கட்டுமானக் கற்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான கற்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை 3 மாதங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி கட்டுமானப் பொருட்களை மாநில எல்லையைத் தாண்டி கொண்டு செல்ல முயற்சிப்பவர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகங்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்:
இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும், சட்டவிரோதமாக கட்டுமானப் பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க சோதனைகளை வலுப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தடை மூலம் மாநிலத்திற்குள் கட்டுமானப் பொருட்களின் கிடைப்பை உறுதி செய்வதோடு, விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்கட்டமைப்பு திட்டங்கள் தடையின்றி நடைபெறவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
