Thursday, June 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

வெள்ளை அறிக்கை திருப்தி இல்லை: தமிழக முதல்வர்!

தமிழக நிதிநிலை குறித்து, வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை தெரிவிக்காதது, முதல்வர் விஜயிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியின் நிதிநிலை குறித்து, விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என, முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, நிதி அமைச்சர் மரிய வில்சன், நேற்றுமுன்தினம் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதில் நிதி முறை கேடு குறித்த விபரம் எதுவும் இடம் பெறவில்லை . இது, அரசு மீது எதிர்மறையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிடும் நிகழ்வில், தி.மு.க.,வுக்கு எதிராக, எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் வெளியிடப்பட்ட, பல்வேறு திட்டப் பணிகளுக்கான ‘டெண்டரில்’ அதிக தொகை குறிப்பிட்டு, மோசடி நடந்திருப்பதாக, அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். இது போன்ற டெண்டர்களால், எவ்வளவு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், எவ்வளவு செலவிடப்படாமல் திரும்பி வந்தது, எவ்வளவு முறையாக செலவழிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்படவில்லை. இதனால், வெள்ளை அறிக்கையை தயார் செய்த அதிகாரிகள் குழுவுக்கு, முதல்வர் விஜய் கடுமையாக சாடியுள்ளார். சட்டசபை கூட்டத்தொடரில், வெள்ளை அறிக்கையில் விடுபட்ட பல விஷயங்களை முதல்வரின் பதிலுரையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.