
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில், நாட்டை வலுப்படுத்துவதில் இணையுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டு மக்களுக்கு ஏழு வேண்டுகோள்களை விடுத்தார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் கார் பூலிங் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் நுகர்வைக் குறைத்து, அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவுமாறு அவர் குடிமக்களை வலியுறுத்தினார்.
மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வர்த்தகமாகி வரும் வேளையிலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் நீடித்து வரும் வேளையிலும் பிரதமரின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது. கடந்த மாத இறுதியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 126 அமெரிக்க டாலர் என்ற 52 வார கால உச்சத்தைத் தொட்டிருந்தது.
ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது உட்பட, விருப்பச் செலவினங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடி குடிமக்களை வலியுறுத்தினார். வெளிநாடுகளில் நடைபெறும் திருமணங்களை மறுபரிசீலனை செய்வது அல்லது ஓராண்டுக்கு அதிகப்படியான தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்துவது போன்ற வெளிநாட்டுச் செலவினங்களைக் குறைப்பதற்கான வழிகளை ஆராயுமாறும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதை விவசாயிகள் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ‘உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு’ இயக்கத்தை முன்னெடுத்த அவர், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது ‘விக்ஷித் பாரத்’ இலக்கை அடைய, தற்சார்பும் இயற்கை விவசாயமும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
