Tuesday, March 31பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பெரம்பூர் மட்டுமின்றி, திருச்சி கிழக்கிலும் விஜய் போட்டி – தவெக வியூகம் என்ன?

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் வலுவான கோட்டைகளாகக் கருதப்படும் இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதால், கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த விஜய், அப்போதுதான் தனது இரட்டை வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜயின் முடிவு, ‘நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாக’ திமுக விமர்சிக்கிறது. ஆனால், இது ‘வியூக அடிப்படையிலான முடிவு’ என தவெக விளக்கம் அளிக்கிறது. திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜயை ‘தைரியமில்லாதவர்’ என சாடினார். “பெரம்பூரை விட்டுவிட்டு திருச்சி கிழக்கில் மட்டும் போட்டியிடத் தயாரா?” என்று அவர் சவாலும் விடுத்தார். இதற்குப் பதிலளித்த தவெக நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய முதலமைச்சர் வேட்பாளர்களான மு.க.ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரண்டு தொகுதிகளில் நிற்கவில்லை என்பதை மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விமர்சனங்களுக்குப் பதிலளித்த தவெகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் கூறுகையில், “இது மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு. திமுகவின் வலுவான தொகுதிகள் என்பதாலேயே அவற்றில் போட்டியிட முடிவு செய்தோம்.” “எங்களின் அரசியல் எதிரியின் வலிமையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்றும் ஃபெலிக்ஸ் தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதி ஏன் தேர்வு செய்யப்பட்டது?

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். வியாசர்பாடி, மூலக்கடை, மகாகவி பாரதி நகர், முல்லை நகர், கொடுங்கையூர் என உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகள் இத்தொகுதியில் அடங்கும்.

இங்கு திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.டி. சேகர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், பாமக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. பெரம்பூர் சென்னையின் மையப் பகுதியில் உள்ள தொகுதி என்று கூறும் ஃபெலிக்ஸ், “அங்கு விஜய் போட்டியிடும்போது ஒரு அலை ஏற்படும். அதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்று திமுகவைத் தோற்கடிக்க முடியும்” என்று நம்புகிறார்.

மேலும், தவெகவில் உறுப்பினர் சேர்வதற்கான செயலி மூலம் இந்தத் தொகுதியில் மட்டும் சுமார் 45,000 பேர் அடிப்படை உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளதாகவும் தவெக தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.