
உலகின் மிகப்பெரிய வருடாந்திர உணவு மற்றும் பானங்கள் கொள்முதல் நிகழ்வான கல்ஃப்ஃபுட் 2026-ல் (Gulfood 2026) இந்தியா பங்கேற்கிறது. அதன் 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, இந்த நிகழ்வு இன்று துபாயில் இரண்டு இடங்களில் தொடங்கியது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), துபாய் உலக வர்த்தக மையம் மற்றும் எக்ஸ்போ சிட்டி துபாயில் உள்ள துபாய் கண்காட்சி மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியா பங்கேற்பிற்குத் தலைமை தாங்குகிறது.
1,434 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்திய அரங்கை, உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் அவினாஷ் ஜோஷி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்த அரங்கில், இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 161 கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஏற்றுமதியாளர்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மாநில அரசு முகமைகள் மற்றும் தேசிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பும் (FIEO) பங்கேற்றுள்ளது; அதன் 11 கண்காட்சியாளர்கள் வேளாண் மற்றும் உணவுப் பொருட்களை, குறிப்பாக பாஸ்மதி அரிசி மற்றும் பிற தானிய வகைகளை காட்சிப்படுத்துகின்றனர். உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று கல்ஃப்ஃபுட் 2026 நிகழ்விற்கு வருகை தந்துள்ளது. இந்த அமைச்சகம், இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து, உணவு பதப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்க கூட்டாகச் செயல்பட்டு வருகிறது.
கல்ஃப் பிராந்தியத்தில் இந்திய வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்தியுள்ள இந்தியா-ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய வேளாண்-உணவு வர்த்தகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கையும், ஐக்கிய அரபு அமீரகத்துடனான வலுவான உறவுகளையும் இந்தியாவின் பங்கேற்பு பிரதிபலிக்கிறது என்று எங்கள் துபாய் செய்தியாளர் தெரிவிக்கிறார். கல்ஃப்ஃபுட் 2026 நிகழ்வு இந்த மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.
