
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நேற்று புதுதில்லியில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரைச் சந்தித்தார்.
ஒரு சமூக ஊடகப் பதிவில், இந்த இரு தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று டாக்டர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அரசுமுறைப் பயணமாக நேற்று புதுதில்லி வந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வர்த்தகம் மற்றும் தொழில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார். திரு. கோஸ்டா மற்றும் திருமதி லேயன் ஆகியோருக்கு விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை மற்றும் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாக்டர் ஜெய்சங்கர் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் கஜ்ஜா கல்லாஸ் உடனும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரும் தங்களின் பரிமாற்றங்களைத் தீவிரப்படுத்தவும், ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லவும் ஒப்புக்கொண்டதாக டாக்டர் ஜெய்சங்கர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தத் தலைவர்கள் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று கர்தவ்யா பாதையில் நடைபெறும் 77வது குடியரசு தின கொண்டாட்டங்களில் இவர்கள் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர். இந்தப் பயணத்தின் போது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய (EU) மூலோபாய கூட்டாண்மையின் அடுத்த கட்டம் குறித்து இந்தத் தலைவர்கள் ஆராய்வார்கள்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களில் வேரூன்றிய ஒரு கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் ஈடுபாடு, வரவிருக்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு மற்றும் நடைபெற்று வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துடன் இணைந்து, ஐரோப்பா மீதான அதன் மூலோபாய கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப்ளூ கார்டு வைத்திருப்பவர்கள் உட்பட, 9 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தசாப்தங்களில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் எராஸ்மஸ் முண்டஸ் உதவித்தொகைகளைப் பெற்றுள்ளனர், இது இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் இடம்பெயர்வு மற்றும் கல்வித் தொடர்புகளை எடுத்துக்காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் இந்தப் பயணம், இந்தியாவின் உலகளாவிய மற்றும் ஐரோப்பிய மூலோபாயத்தின் ஒரு முக்கிய தூணாக இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
