Wednesday, December 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்க அனுமதி.

தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கைரேகை அல்லது கண் கருவிழி பதிவேற்றம் சாத்தியமாகாத நிலையில், பயனாளிகளிடமிருந்து கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களது கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் விவரங்களை பதிவேற்றம் செய்து, தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ஆனால், ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4ஜி கைபேசி சாதனங்கள் மற்றும் சர்வர் வசதிகள் அடிக்கடி பழுதடைந்து செயல்படாமல் போவது, இணைய இணைப்பு குறைபாடுகள் போன்ற காரணங்களால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது. இதனால், சில பகுதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு, பயனாளிகள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கைரேகை அல்லது கண் கருவிழி பதிவேற்றம் செய்ய முடியாத சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட பயனாளிகளின் விவரங்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்து, கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ரேஷன் பெற முடியாமல் தவித்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மனிதாபிமான அடிப்படையில் செயல்படும் தாயுமானவர் திட்டம் அதன் நோக்கத்தை மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் இந்த சலுகை அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.