
நகர்ப்புற போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் விரைவில் ‘ஏர் டாக்சி’ சேவை தொடங்கப்பட உள்ளது. விண்வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘சரளா ஏவியேஷன்’, 2028க்குள் எலக்ட்ரிக் ஏர் டாக்சி சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான கள சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில், இருசக்கர வாகனங்களைப் போலவே எதிர்காலத்தில் வான் வழியாக குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளும் ‘ஏர் டாக்சி’ சேவைகளை அறிமுகப்படுத்த பல சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த போட்டி சூழலில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ‘சரளா ஏவியேஷன்’ நிறுவனம், முழுமையாக எலக்ட்ரிக் அடிப்படையிலான ஏர் டாக்சிகளை வடிவமைத்து வருகிறது.
வரும் 2028க்குள் இந்த சேவையை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப மேம்பாடு, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் டில்லியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியின் போது, ‘சூன்யா’ என பெயரிடப்பட்ட ஏர் டாக்சி மாடலை இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. இந்த மாடல் பார்வையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களிடையே கவனம் பெற்றது.
கள சோதனைகள் – முக்கிய மைல்கல்:
இதுகுறித்து ‘சரளா ஏவியேஷன்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த தலைமுறை விமான போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள எங்கள் சோதனை மையத்தில், ‘எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் அண்ட் லேண்டிங்’ (eVTOL) தொழில்நுட்பத்தின் கீழ், தரையில் இருந்தபடியே மேலெழும்பி புறப்படுதல் மற்றும் அதேபோல் தரையிறங்குதல் தொடர்பான கள சோதனைகள் நடைபெற்று வருகின்றன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில், இந்த திட்டம் பல முக்கிய தொழில்நுட்ப மைல்கற்களை எட்டியுள்ளதாகவும், பொறியியல் தரம், செயல்படுத்தும் வேகம் மற்றும் நிலைத்தன்மை ஆகிய சோதனைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எஸ்.ஒய்.எல்.எக்ஸ்.-1’ என பெயரிடப்பட்ட இந்த தனியார் ஏர் டாக்சி மாடல், அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவி மும்பையில் தளம் அமைக்கும் திட்டம்:
இதற்கிடையே, ஏர் டாக்சி சேவைகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், அதானி குழுமமும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை பகுதியில், ஏர் டாக்சிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பயணிகள் சேவையை வழங்கும் வகையில், ஒரு தளம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகமான ‘சிட்கோ’விடம் அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது.
புனே – மும்பை நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக நவி மும்பையை தேர்வு செய்து, அங்கு எதிர்கால வான்பாதை போக்குவரத்து மையமாக உருவாக்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சிகள் நடைமுறைக்கு வந்தால், போக்குவரத்து நெரிசலை குறைத்து, குறுகிய நேரத்தில் பயணிகளை இலக்கிடம் சேர்க்கும் புதிய யுகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏர் டாக்சி சேவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், நகர்ப்புற போக்குவரத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பெரும் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
