
ஆப்கானிஸ்தானுக்கு நீண்ட காலத்திற்கு மருந்துகளை வழங்குவதில் கவனம் செலுத்தி, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகள் மற்றும் சுகாதார ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த ஆப்கானிஸ்தானின் பொது சுகாதாரத் துறை அமைச்சர் மௌலவி நூர் ஜலால் ஜலாலியுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இதை மீண்டும் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின்போது, புற்றுநோய் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறியீட்டு ரீதியாக ஒப்படைக்கப்பட்டன; இது ஆப்கானிய மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அதிக அளவிலான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் 128-ஸ்லைஸ் சிடி ஸ்கேனர் ஆகியவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஆப்கானிய அமைச்சர் இந்த மாதம் 16 முதல் 21 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் புது டெல்லியில் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். தனது இந்தியப் பயணத்தின்போது, திரு. மௌலவி நூர் ஜலால் ஜலாலி வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரும் தற்போது நடைபெற்று வரும் சுகாதாரம் தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரம் குறித்த கூட்டுப் பணிக் குழுவை அமைத்தல், ஆப்கானிஸ்தானில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை நிறுவுதல் மற்றும் ஆப்கானிய மருத்துவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மருத்துவக் குழுவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து விவாதித்தனர். ஆப்கானிய அமைச்சர் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவையும் சந்தித்தார். அப்போது, கல்வி, ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மருத்துவங்களின் ஒழுங்குமுறை ஆகியவற்றில் அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
