Tuesday, February 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சீனக் கடலடித் தங்கக் கண்டுபிடிப்பு: உலக தங்கச் சந்தையை உலுக்கும் அறிவிப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் உறைந்திருந்த இந்த அபூர்வ தங்க இருப்பு, உலக தங்கச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீண்டகால கனிம ஆய்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக, கடலடித் தங்கத்தை சுரங்கம் தோண்டி எடுக்கும் பணிகளுக்கு சீனா தயாராகி வருகிறது.

இந்த தங்கப் படிமம், ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகே, கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகள் மூலம் இப்பகுதியில் 562 டன் உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு டன் தாதுவுக்கு சராசரியாக 4.2 கிராம் தங்கம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2,000 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் – ரூ.10 பில்லியன் யுவான் முதலீடு:
கடலுக்கு அடியில் சுமார் 2,000 மீட்டர் ஆழத்தில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க, சீனா 10 பில்லியன் யுவான் (தோராயமாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டை அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 12,000 டன் தாதுவை பிரித்தெடுக்கும் திறன் கொண்ட நவீன கடல்சார் சுரங்க வசதி அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக செயல்படத் தொடங்கியதும், ஆண்டுக்கு 15 டன் தங்கம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீனாவின் உள்நாட்டுத் தங்க விநியோகச் சங்கிலி வலுப்பெற்று, இறக்குமதி சார்பு குறையும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3,900 டன் – சீனாவின் தங்கக் கையிருப்பில் 26%:
இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், லைஷோ கடற்பகுதியில் மட்டும் சீனாவின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு 3,900 டன்களை தாண்டியுள்ளது. இது நாட்டின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 26 சதவீதம் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் லியாவோனிங் மாகாணத்தில் 1,440 டன் மற்றும் குன்லுன் மலைகள் அருகே 1,000 டன் மதிப்பிடப்பட்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு சவாலா? – வல்லுநர்கள் எச்சரிக்கை:
இந்தத் தொடர் கண்டுபிடிப்புகள், சர்வதேச தங்கச் சந்தையில் சீனாவை ஒரு முக்கிய சக்தியாக மாற்றியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். Apollo Global Management நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ‘டார்சன் ஸ்லோக்’, மத்திய வங்கிகளின் கொள்முதல், ஆர்பிட்ரேஜ் வர்த்தகம் மற்றும் சீனக் குடும்பங்களின் அதிகரித்த தேவை காரணமாக தங்க விலை உயர்வில் சீனா முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்க டாலரின் வர்த்தக ஆதிக்கம் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.