
அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதிப் பரிசோதனைகளை மேலும் கடுமையாக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக ஊடக கணக்குகளின் தகவல்களை வழங்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையை அமெரிக்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், விசா இல்லாமல் 90 நாட்கள் வரை அமெரிக்கா சென்று வர அனுமதிக்கப்படும் நாடுகளின் பயணிகளுக்கு இது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்களைப் பாதிக்கும். இந்நாடுகளின் மக்கள், ஈஎஸ்டிஏ (ESTA – Electronic System for Travel Authorization) முறையின் மூலம் விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்கு பலமுறை அமெரிக்காவுக்கு பயண அனுமதி பெறுகிறார்கள்.
டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்:
டொனால்ட் டிரம்ப், “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் பல்வேறு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சமூக ஊடக கணக்குத் தகவல்களை கேட்கும் இந்த புதிய திட்டம், “பாதுகாப்பை உறுதி செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கையாக” கருதப்படுகிறது. செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த நடவடிக்கை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் என்ற அச்சத்தை அவர் நிராகரித்து, “நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம். பாதுகாப்பே எங்களின் முதல் முன்னுரிமை” என தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் விவரம் என்ன?
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் & எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஃபெடரல் பதிவேட்டில் வெளியிட்டுள்ள ஆவணத்தில், பின்வரும் விஷயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன: விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள்/ஹேண்டில்கள் வழங்க வேண்டும். கடந்த 5–10 ஆண்டுகளில் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் கேட்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்படும். தகவல் வழங்கப்படாவிட்டால், தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த முன்மொழிவு 60 நாட்கள் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்கும் நிலையில் இருக்கிறது.
ஏன் இந்தக் கடுமையான பரிசோதனை?
இந்தத் திட்டம், ஜனவரியில் டிரம்ப் வெளியிட்ட “அமெரிக்காவைக் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலிலிருந்து காக்க” என்ற நிர்வாக உத்தரவுடன் இணங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நபர்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லது வன்முறையைத் தூண்டுபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கையென அதிகாரிகள் விளக்குகின்றனர்.
மேலும், விண்ணப்ப செயல்முறை நீளமாகலாம், தெளிவற்ற கூடுதல் தரவு கோரிக்கைகள் உருவாகலாம், பயணிகள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கு சிரமம் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
டிரம்ப் நிர்வாகம் முன்கூட்டியே, மாணவர் விசா, H-1B தொழிலாளர் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளை பரிசோதிப்பதாக அறிவித்தது. அங்கு, கணக்கு அமைப்புகள் “பொது (Public)” நிலையில் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது.
இந்த மாற்றங்கள் அமெரிக்காவின் சுற்றுலா வருவாயில் குறைவு ஏற்படுத்தக்கூடும் என்று ஏற்கெனவே பல அமைப்புகள் எச்சரித்துள்ளன.
உலகப் பயணம் & சுற்றுலா கவுன்சில் (WTTC) ஆய்வில், 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவு காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், கனடாவைச் சேர்ந்த பலர் அமெரிக்கப் பயணத்தை புறக்கணித்தது, பயணத் தடைகள், குடியேற்றக் கொள்கைகள் மீண்டும் சுற்றுலா வருமானத்தை பாதித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் வெளியான தரவுகளின்படி, கனடியர்களின் அமெரிக்கப் பயணம் தொடர்ந்து 10 மாதங்களாக சரிவில் உள்ளது.
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியும் 2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதால், அடுத்தாண்டுகளில் பெரிய அளவில் வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இதற்குள் புதிய கடுமையான தரவுச் சேகரிப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்தால், பயணிகளிடையே குழப்பமும் அதிருப்தியும் உருவாகலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
