
உலக அறிவியல் சமூகத்தை மிகப்பெரிய அதிர்வில் ஆழ்த்தும் வகையில், பெல்ஜியமை சேர்ந்த 15 வயது இளம் மேதை லாரண்ட் சைமன்ஸ் (Laurent Simons), குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் (PhD) பெற்று வரலாறு படைத்துள்ளார். இளம் வயதிலேயே சாதனை மீது சாதனைகளை படைத்து வந்த அவர், தற்போது உலகின் மிக இளைய குவாண்டம் இயற்பியல் முனைவர் பட்டதாரியாக திகழ்கிறார்.
வெகுவேகமான கல்விப் பயணம்:
2009 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த லாரண்ட் சைமன்ஸ், சிறுவயதிலேயே அதிபுத்திசாலியாக அடையாளங்காணப்பட்டார். சாதாரண குழந்தைகள் தொடக்கக் கல்வியை முடிக்கும்போது, லாரண்ட் சைமன்ஸ் சாதனைகளின் பாதையைத் தொடங்கி விட்டார்.
வெறும் 8 வயதில் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தொடர்ந்து 11 வயதில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சாதாரணமாக 3 ஆண்டுகள் படிக்க வேண்டிய இளங்கலைப் படிப்பை, அவர் வெறும் 18 மாதங்களில் சிறப்பான மதிப்பெண்களுடன் நிறைவு செய்தார். அதற்கு அடுத்த கட்டமாக, 12 வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
லாரண்டின் புதிய வரலாறு:
2025 ஆம் ஆண்டு, 15வது வயதில், ஆண்டர்வெர்ப் பல்கலைக்கழகத்தில் (University of Antwerp) குவாண்டம் இயற்பியலை மையமாகக் கொண்ட தனது ஆய்வு கட்டுரையை வெற்றிகரமாக சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வமாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
“Bose polarons in superfluids and super solids” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது ஆராய்ச்சி, குவாண்டம் அறிவியலின் மிகவும் சிக்கலான கூறுகளை ஆழமான முறையில் ஆராய்ந்துள்ளது. இந்த ஆய்வு, சூப்பர் திரவங்களும் சூப்பர் திண்மங்களும் உள்ள சூழலில், போஸ்-போலாரான்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது. அறிவியல் வட்டாரங்கள், “இந்த வயதில் இத்தகைய உயர் மட்ட ஆய்வை நிறைவு செய்திருப்பது அதிசயத்தைவிட மேலானது” எனப் பாராட்டுகின்றன.
எதிர்கால நோக்கம், மனித வாழ்க்கையை மாற்றப்போகும் கனவு:
குவாண்டம் ஒளியிடலில் (Quantum Optics) பயிற்சி பெற்ற லாரண்ட் சைமன்ஸ், அறிவியலுக்கும் மருத்துவத்திற்கும் இடையிலான தொடர்பைப் பற்றிய ஆழமான ஆர்வம் கொண்டுள்ளார். மனித வாழ்க்கையை நீடிப்பது மற்றும் சூப்பர்-மனிதர்களை உருவாக்குவது அவரது பெரும் கனவாக உள்ளது.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கோடிக்கணக்கில் ஊதியமும் சலுகைகளும் வழங்க முயன்றபோதும், லாரண்ட் அவற்றை ஏற்க மறுத்துள்ளார். “மனித வாழ்நாளை அதிகரிப்பது மற்றும் மனித திறன்களை உயர்த்துவது தான் என் முதன்மை இலக்கு” என அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.
உலகம் கவனிக்கும் இளம் மேதை:
இளம் வயதில் இத்தகைய சாதனைகள் படைத்த லாரண்ட் சைமன்ஸ், எதிர்காலத்தில் அறிவியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நபராக மதிக்கப்படுகிறார். அடுத்த சில வருடங்களில் அவரது ஆய்வுகள், மருத்துவம், நரம்பியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் புதிய புரட்சிகளுக்கான பாதையைத் திறக்கப் போவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
அறிவியல் உலகின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய 15 வயது இளம் மேதை லாரண்ட் சைமன்ஸ், எதிர்காலத்தில் அறிவியலின் முகத்தை மாற்றுவார் என்பது உறுதி.

