Tuesday, March 3பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

செவ்வாய் கிரகத்தில் கட்டிடங்கள் கட்டும் புரட்சிகர முயற்சி: பாக்டீரியாவால் உருவாகும் ‘Mars Concrete’!

மனிதனை பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களில் குடியேறச் செய்ய வேண்டும் என்ற கனவு, பல தசாப்தங்களாக விண்வெளி விஞ்ஞானிகளை ஆக்கிரமித்து வருகிறது. அதிலும், பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகமே மனிதர்களின் எதிர்கால குடியேற்ற தளமாக ஆராயப்பட்டு வருகிறது. நாசா மற்றும் பல சர்வதேச விண்வெளி ஆய்வு மையங்கள், 2030களில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. எனினும், முக்கிய சவால்,செவ்வாயில் வீடுகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை எப்படி உருவாக்குவது?

விண்வெளிப் பயணத்தின் மிகப்பெரிய சவால் – கட்டுமானப் பொருட்களின் செலவு:
மனிதரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கே கோடிக்கணக்கில் செலவாகும் நிலையில், அவர்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களையும் பூமியில் இருந்து கொண்டு செல்வது முடியாத காரியமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, செவ்வாயிலே உள்ள வளங்களைப் பயன்படுத்தி கட்டுமானப்பொருட்களை உருவாக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

மிலான் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு:
இத்தாலியின் மிலன் பாலிடெக்னிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விஞ்ஞான உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில், பாக்டீரியாவைப் பயன்படுத்தி செவ்வாயில் கான்கிரீட் போன்ற கட்டுமானப் பொருட்களை உருவாக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறைக்கு “In-Situ Resource Utilization (ISRU)” எனப் பெயரிடப்பட்டுள்ளது, அதாவது அந்த கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பொருட்களை உருவாக்குதல்.

பாக்டீரியா + செவ்வாய் தூசி = கான்கிரீட்!
ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையான பாக்டீரியாக்களைத் தேர்வு செய்துள்ளனர்: Sporosarcina pasteurii மற்றும் Chroococcidiopsis

செவ்வாய் கிரகத்தின் தூசி மற்றும் பாறைத் துகள்கள் (Regolith) உடன் இந்த பாக்டீரியாக்களை சேர்த்தால், அதில் நிகழும் உயிர்வளச் செயற்பாட்டால் கான்கிரீட் போல் உறுதியான கட்டுமானப் பொருள் உருவாகும் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. Sporosarcina பாக்டீரியா இயற்கையாகவே சில பாலிமர்களை சுரந்தளிக்கிறது; இது மண்ணை திடப்படுத்தி, கான்கிரீட்டாக மாற்றுகிறது. இந்த புதிய கலவையை 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் இணைத்தால், செவ்வாயில் வீடுகள், கட்டிடங்கள், ஆய்வு மையங்கள் போன்ற அனைத்தையும் அங்கேயே கட்ட முடியும். கட்டிடங்களைத் தாண்டி – ஆக்சிஜன், விவசாயம், உயிர்வள ஆதரவு அமைப்பு பாக்டீரியாக்களின் பயன்பாடு கட்டுமானத்திலேயே முடிவதில்லை. Chroococcidiopsis பாக்டீரியாவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இதனால் விண்வெளி வீரர்களுக்கான Life Support அமைப்புகள் மேம்படுகின்றன.

அம்மோனியா உற்பத்தி:
மற்றொரு பாக்டீரியா உருவாக்கும் அம்மோனியாவை பயன்படுத்தி, செவ்வாயில் மூடிய வளைய (closed-loop) விவசாய அமைப்புகளை உருவாக்க முடியும். அதாவது, மனிதர்கள் அங்கேயே விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய முடியும்.

செவ்வாயில் மனிதர் குடியேற்றம் – இனி நெருங்கிய நிஜம்:
இந்தப் புரட்சிகர கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பாக்டீரியாவைக் கொண்டு வீடுகள் கட்டி, தேவையான ஆக்சிஜன் தயாரித்து, அங்கேயே விவசாயம் செய்து, முழுமையான தன்னிறைவு வாழ்க்கையை மனிதர்கள் செவ்வாயில் நடத்தலாம் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு உலக விஞ்ஞான சமூதாயத்தில் விதைத்துள்ளது.

எதிர்காலம் கையில்!
செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்ட கட்டிடங்கள், தன்னிறைவு குடியேற்றம், உயிர் வள அடிப்படையிலான கட்டுமானம் ஆகியவை இனி கற்பனைக்குள் மட்டுமல்ல உண்மைக்கு மிக அருகில் நின்றுள்ள புதிய அறிவியல் புரட்சி!