
மனிதர்கள் வாழவும் வளரவும் தேவையான அனைத்து இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டது பூமி. ஆக்ஸிஜன், நீர், வானிலை அமைப்பு உள்ளிட்ட பரவலான சூழல் காரணிகள் அனைத்தும் பல்வேறு உயிரினங்களின் வாழ்வை பாதுகாக்கின்றன. இந்த வாழ்வு வளமான கிரகத்தின் ஒரு மிக முக்கிய அம்சம் அதன் ‘சுழற்சி வேகம்’. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் பூமி மேற்கிலிருந்து கிழக்கே ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது.
இந்நிலையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொறியியல் கட்டமைப்பு, பூமியின் இந்த இயல்பான சுழற்சியையே பாதிக்கிறது என்றால்? நம்ப முடியாத இந்த தகவலை தற்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் திட்டம் பூமியின் சுழற்சியை பாதிக்கிறது:
நாசாவின் சமீபத்திய அறிவியல் ஆய்வு, மனிதரின் பொறியியல் முன்னேற்றங்களுக்கும் பூமியின் சுழற்சி வேகத்திற்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதாவது, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக விளங்கும் சீனாவின் ‘த்ரீ கோர்ஜஸ்’ (Three Gorges) அணை, பூமியின் சுழற்சியை சற்றே மந்தப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அணை 40 பில்லியன் கன மீட்டர் (1 பில்லியன் = 100 கோடி) தண்ணீரை தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட நீர் சேமிப்பு, பூமியின் மேற்பரப்பில் எடையின் பகிர்வை மாற்றுவதன் மூலம் சுழற்சி வேகத்தை குறைக்கிறது என நாசா அறிவித்துள்ளது.
ஒரு நாளின் நீளத்தில் நுட்பமான மாற்றம்:
விஞ்ஞானிகளின் மதிப்பீட்டு படி, இந்த நீர் சேமிப்பு செயல்பாடு ஒவ்வொரு நாளும் பூமியின் சுழற்சியை 0.06 மைக்ரோ விநாடிகள் (ஒரு விநாடியின் ஒரு லட்சத்தில் ஒரு பகுதி அளவு) மந்தப்படுத்துகிறது. முதலில் இது மிகச் சிறியதாகக் தோன்றினாலும், காலப்போக்கில் இதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார் நாசா விஞ்ஞானி ‘பெஞ்சமின் போங் சாவ்’. நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பும்போது, அது பூமியின் எடையை அதிகமாக ‘பூமத்திய ரேகை (equator)’ நோக்கி தள்ளுவதால் சுழற்சி வேகம் குறைகிறது என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
த்ரீ கோர்ஜஸ் அணை: உலகின் மிகப்பெரிய பொறியியல் அற்புதம்:
சீனாவின் யாங்சே நதிக்கு மேலாக அமைந்துள்ள இந்த அணை:
185 மீட்டர் உயரம்
2 கிலோமீட்டர் நீளம்
22,500 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன்
என்னும் பிரம்மாண்ட அம்சங்களை கொண்டது. இது, உலக நாடுகளில் பலவும் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட மிக உயர்வானது. புதுப்பிக்கத்தக்க (Renewable) ஆற்றலின் மிகச் சிறந்த ஆதாரமாக இது செயல்படுகிறது.
முக்கிய எச்சரிக்கை:
பெரிய அளவிலான மனிதத் திட்டங்கள் இயற்கை அமைப்புகளில் ஏற்படுத்தும் விளைவுகள் எதிர்பாராதவையாக இருக்கலாம் என்பதையும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது. ஆற்றல் உற்பத்தி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவைகள் நாடுகளின் தேவையே ஆனாலும், அதன் தாக்கம் பூமி போன்ற மாபெரும் இயற்கை அமைப்புகளையும் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
மனித முன்னேற்றம் மற்றும் இயற்கை சமநிலை:
இத்தகவல், எதிர்கால வளர்ச்சி திட்டங்களைத் திட்டமிடும் உலக அரசுகளுக்கு சிந்திக்க வைக்கும் வலுவான அறிவியல் செய்தியாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
