
லத்தீன் அமெரிக்கா அருகிலுள்ள கடல் எல்லையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு வந்தடைந்தது, அமெரிக்கா–வெனிசுவேலா உறவுகளில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 1989 பனாமா படையெடுப்புக்குப் பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய ராணுவ முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது.
மதுரோ மீது அமெரிக்க குற்றச்சாட்டு – வெனிசுவேலாவின் மறுப்பு:
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அமெரிக்க போர்க் கப்பல் கரையோரத்தில் நிலைநிறுத்தப்பட்டதை, மதுரோ அரசு ஒரு “ராணுவ அழுத்தத் திட்டம்” என்கிறார்.
பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவின் நில, கடல், வான், நதி மற்றும் ஏவுகணை படைகள் அனைத்தும் “பெரிய அளவில்” நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக, 2 லட்சம் படைகள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நோக்கம் என்ன?
டிரம்ப் நிர்வாகம் வெனிசுவேலாவில் செயல்படும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக கூறினாலும், ஆய்வாளர்கள் இதை மதுரோவை பலவீனப்படுத்தும் பரந்த உத்தி என கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் ‘மோசடி’ என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டியதால், அமெரிக்கா மதுரோவின் ஆட்சியை சட்டவிரோதமானது என்று கருதுகிறது.
வெனிசுவேலாவின் படைத்திறன் – உண்மையா? அல்லது அரசின் விளம்பரமா?
மதுரோ “80 லட்சம் மக்கள் ஆயுதம் ஏந்தத் தயாராக உள்ளனர்” என்று கூறியிருந்தாலும், நிபுணர்கள் இதை முழுமையாக நிராகரிக்கின்றனர். முன்னாள் அமெரிக்க தூதர் ஜேம்ஸ் ஸ்டோரி கூறுவதாவது, “மதுரோ கூறும் எண்ணிக்கை முற்றிலும் யதார்த்தமற்றது. ராணுவத்திலிருந்து தப்பிச் செல்லும் விகிதம் அதிகரித்துள்ளது. உண்மையில் வெனிசுவேலாவுக்கு உள்ள படைகள், 1,23,000 ராணுவத்தினர், 2,20,000 பொதுமக்கள் படை, 8,000 ரிசர்வ் படையினர். படைப்பயிற்சி குறைந்தது, ஆயுதங்கள் பற்றாக்குறை, செயல்படாத உபகரணங்கள் ஆகியவை காரணமாக வெனிசுவேலா பெரிய போரைச் சந்திக்க முடியாது” என்று அவர் கூறுகிறார்.
ரஷ்யா மற்றும் சீன ஆயுத சக்தி – வெனிசுவேலாவுக்கு ஒரு ஆதரவா?
சுகோய் போர் விமானங்கள் மற்றும் F-16 கள், 20 ரஷ்ய சுகோய் போர் விமானங்கள் – சில மட்டுமே செயல்படுகின்றன,
1980-களில் வாங்கப்பட்ட F-16 களில் – 1 அல்லது 2 மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் உள்ளன.
இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்:
மதுரோ சமீபத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 Igla-S வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அணி திரட்டியுள்ளார்.
இந்த ஏவுகணைகள்: குறுகிய தூர பாதுகாப்பு, டிரோன், ஹெலிகாப்டர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை.
டிரோன்கள் மற்றும் வேகப்படகுகள்:
சீனாவில் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்கள், இரான் தயாரித்த பேகாப்–III கப்பல் எதிர்ப்பு ஏவுகணை படகுகள், வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட ANSU-100, ANSU-200 டிரோன்கள், ரஷ்யாவின் பான்ட்சிர்-எஸ்1, புக்-எம்2ஈ ஏவுகணை அமைப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் பலவும் முழுமையாக செயல்படுகிறதா என்பது சந்தேகமே என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் – அமெரிக்காவுக்கு முன் பலவீனமா?
1960-களில் வடிவமைக்கப்பட்ட ரஷ்ய ‘பெச்சோரா’ ஏவுகணை அமைப்புகள் வெனிசுவேலாவின் முக்கிய வான் பாதுகாப்பு ஆயுதமாக கருதப்படுகின்றன. ஆனால் நிபுணர்கள் கூறுவதாவது: இந்த அமைப்பு மிக பழமையானது. அமெரிக்காவின் நவீன ராணுவத்துக்கு எதிராக எளிதில் வீழக்கூடியது.
கொரில்லா போர் – மதுரோவின் கடைசி ஆயுதமா?
வெனிசுவேலா அரசு, பெரிய அளவிலான கொரில்லா போருக்கு முழுமையாக தயாராகி வருகின்றது என தகவல்கள் வெளியாகின்றன. “நாடு நீண்டகால போருக்கு தயாராக உள்ளது, ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க உத்தரவு” – உள்துறை அமைச்சர்.
அமெரிக்கா எதிராக வெனிசுவேலா போரிட முடியுமா? நிபுணர்களின் கருத்து:
கொலம்பியா அல்லது பிரேசில் போன்ற அண்டை நாடுகளுடன் வெனிசுவேலா போராட முடியும். அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வெனிசுவேலாவுக்கு எந்தவித திறனும் இல்லை. ரஷ்யா மற்றும் சீன ஆயுதங்கள் இருந்தாலும், அவை முழுமையாக செயல்படவில்லை. வான் பாதுகாப்பு அமைப்புகள் பலவீனமானவை. ராணுவத்தில் உள்நிலை பிரச்சினைகள் அதிகம்.
அமெரிக்கா – வெனிசுவேலா இடையிலான பதற்றம் புதிய உச்சத்தைத் தொட்டுகொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஆயுதங்கள் மதுரோவை முழுமையாக பாதுகாக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் சக்தி, வெனிசுவேலாவின் உள் பலவீனம், செயலிழந்த ஆயுதங்கள், மக்களின் ஆர்வமின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டால், நேரடி ராணுவ மோதலில் வெனிசுவேலாவின் நிலை மிகக் குறைவு என நிபுணர்கள் ஒருமித்த கருத்து தெரிவிக்கிறார்கள்.
