Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

நடுத்தர மக்களின் சொந்த வீட்டு கனவுக்கு உயிர் ஊட்டும் “புத்துயிர் நிதி”: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

நாடு முழுவதும் வீடு கட்டும் கனவுடன் பாடுபடும் நடுத்தர வர்க்க மக்களின் நலனை பாதுகாக்க, நிறுத்தப்பட்டு நின்று போன கட்டுமான திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில் “புத்துயிர் நிதி” அமைப்பை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சொந்த வீடு என்பது, வரி செலுத்தி வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்த பணத்தை முதலீடு செய்யும் நடுத்தர வர்க்க மக்களின் மிகப்பெரிய கனவாகும். ஆனால், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் பில்டர்கள் திட்டமிட்ட காலத்தில் வீடுகளை முழுதாக கட்டி முடிக்காமல் ஏமாற்றி வருவதால், ஏராளமான குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

நீதிமன்றத்தின் உத்தரவு:

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா மற்றும் ஆர். மஹாதேவன் அடங்கிய அமர்வு வெளியிட்ட உத்தரவில்,

  • – மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது; வீடு வாங்குவோரின் நலனை உறுதி செய்ய வேண்டும்.
  • – தேசிய சொத்து மறுகட்டமைப்பு கம்பெனி (NARCL) மாதிரி ஒரு கார்ப்பரேட் அமைப்பை உருவாக்கி, நிறுத்தப்பட்ட திட்டங்களை அடையாளம் கண்டு நிறைவேற்றும் வழியை வகுக்க வேண்டும்.
  • – ரியல் எஸ்டேட் துறை, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து செயல்படும் அமைப்பை உருவாக்கலாம்.
  • விற்கப்படாமல் இருக்கும் வீடுகளை அரசாங்கம் வாங்கி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இணைக்கலாம். மாற்றாக, அவற்றை அரசு ஊழியர்கள் தங்கும் “குவார்ட்டர்ஸ்” ஆக மாற்றவும் முடியும்.

இந்த வழிமுறைகள் மூலம், வீட்டு பற்றாக்குறை நீங்குவதுடன், நின்று போன திட்டங்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர மக்களின் துயரம்:
வீடு வாங்கும் நடுத்தர மக்கள், வீட்டிற்கான மாத தவணையை (EMI) ஒரு பக்கமும், வாடகை வீட்டிற்கான மாத வாடகையை மறுபக்கமும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் கடுமையான நிதிசுமையைச் சந்திக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் சொந்த வீட்டு கனவு பலிக்காமல் போகிறது.

உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள்:

  • – நிதி பற்றாக்குறையால் நின்று போன திட்டங்களுக்கும், விற்கப்படாத வீடுகளுக்கும் உயிர் கொடுக்க “புத்துயிர் நிதி” உருவாக்க வேண்டும்.
  • – சுவாமி (SWAMIH – Special Window for Affordable and Mid-Income Housing) என்ற சிறப்பு நிதி திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.
  • – மேலும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) விதிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

மூன்று மாத அவகாசம்:

இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், சொந்த வீடு கனவால் தவித்துவரும் கோடிக்கணக்கான நடுத்தர மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.