
செங்கடல் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருந்த இணைய கேபிள்கள் சேதமடைந்ததால், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் நேற்று (ஞாயிறு) இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆப்ரிக்கா–ஆசியாவை இணைக்கும் இந்தியப் பெருங்கடல் பாதையில், ஏமன் நாட்டை ஒட்டிய செங்கடல் பகுதி முக்கிய இடமாக உள்ளது. இந்த பகுதியில் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நான்கு பிரதான இணைய கேபிள்கள் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், அல்காடெல்–லுசென்ட் நிறுவனம் சார்பிலும் இணைய சேவைக்கான கேபிள்கள் இதே பகுதியில் செல்கின்றன.
கடுமையான இணைய தடக்கம்:
இந்த கேபிள்கள் சேதமடைந்ததால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இணைய சேவை நேற்று முழுமையாக அல்லது பகுதியளவில் துண்டிக்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள், வீடியோ கான்பரன்ஸ்கள், நிதி பரிமாற்றங்கள், சர்வர் அடிப்படையிலான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து இணைய சேவைகளை கண்காணித்து வரும் நெட்பிளாக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,
“செங்கடலில் கடலுக்கடியில் பதிக்கப்பட்டிருந்த கேபிள்கள் சேதமடைந்ததால், ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இணைய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; ஓரிரு நாட்களில் சேவை இயல்புக்கு வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் விளக்கம்:
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்ததாவது:
“கடலுக்கடியில் கேபிள்களில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் ஆகும். அந்த இடத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளது.
போரின் தாக்கமா?
செங்கடல் பகுதி தற்போது சர்வதேச அரசியல் மற்றும் ராணுவ மோதலால் பதற்றத்தில் உள்ளது. இஸ்ரேல்–ஹமாஸ் போருக்கு ஆதரவாக, ஏமனில் தளமிட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல்களை தாக்கி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களின் போது இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், “கேபிள்கள் சேதமடைந்ததற்கு நாங்கள் காரணமில்லை” என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், வர்த்தகக் கப்பல்கள் வீசும் நங்கூரங்களால் கேபிள்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
திட்டமிட்ட தாக்குதலா?
ஆனாலும், செங்கடல் பகுதியில் நிலவும் ராணுவ மோதல்கள் காரணமாக முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பல தரப்பினரிடையே எழுந்துள்ளது. இணையதளம் இன்று உலக பொருளாதாரத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் முதன்மையான தளமாக மாறியுள்ள நிலையில், இவ்வாறான கேபிள் சேதம் பல்வேறு நாடுகளில் தொழில், வணிகம், கல்வி மற்றும் அரசாங்க சேவைகளை பெரிதும் பாதித்துள்ளது.