
நாளை (7ம் தேதி) இரவு, இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் அரிய வானியல் நிகழ்வாக முழு சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இது சுமார் 85 நிமிடங்கள் நீடிக்கும் என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
எப்போது, எப்படிப் பார்க்கலாம்?
இரவு 8:58 மணி – சந்திரன் முதலில் மங்கலான புறநிழல் பகுதிக்குள் நுழையும். (இதனை வெறும் கண்களால் பார்க்க சிரமமாக இருக்கும்).
இரவு 9:57 மணி – பகுதி கிரஹணம் துவங்கும். அப்போது, சந்திரன் பூமியின் கருநிழல் பகுதிக்குள் நுழையத் தொடங்கும். இதிலிருந்து கிரஹணத்தை எளிதாகக் காணலாம்.
இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:33 மணி வரை – சந்திரன் முழுமையாக மறைந்து காணப்படும். இதுவே முழு சந்திர கிரஹணம்.
அதிகாலை 1:26 மணி – சந்திரன் கருநிழல் பகுதிக்குள் இருந்து வெளியேறும்.
அதிகாலை 2:25 மணி – புறநிழல் பகுதிக்குள் இருந்தும் முழுமையாக வெளியேறும்.
இத்தகைய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.
சந்திர கிரஹணம் என்றால் என்ன?
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரஹணம்.
நிலவு முழுவதும் பூமியின் கருநிழல் பகுதியை மறைக்கும் போது, அதனை முழு சந்திர கிரஹணம் என அழைக்கப்படுகிறது.
நிலவு முழுமையாக மறையும் போது, அது சிவப்பு நிறமாகத் தோன்றும். இதனை “Blood Moon” (ரத்தச் சந்திரன்) என்றும் குறிப்பிடுகின்றனர்.
நிபுணர்களின் விளக்கம்:
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
“இந்த முறை நிகழும் சந்திர கிரஹணம் 85 நிமிடங்கள் நீடிக்கும். இது நாடு முழுவதும் தெளிவாகக் காணப்படும். பொதுமக்கள் கண்களாலேயே பார்க்கலாம்; எந்தவித பாதுகாப்பு கருவிகளும் தேவையில்லை. அடுத்த முழு சந்திர கிரஹணம் டிசம்பர் 31 , 2028 அன்று நிகழும்.”
பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள்:
சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் தொலைநோக்கி வழியாக கிரஹணத்தை நெருக்கமாகக் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரவு 9:00 மணி முதல் கிரஹணம் முடியும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
எங்கு எங்கு தெரியும்?
இந்த சந்திர கிரஹணம்,
- – இந்தியா முழுவதும்,
– ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, தென்அமெரிக்காவின் கிழக்கு பகுதி,
– பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல்,
– ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் காணப்படும்.
அடுத்த கிரஹணங்கள்:
பகுதி சூரிய கிரஹணம் – வரும் 21, 22ம் தேதிகளில் நடைபெறும். ஆனால் இது இந்தியாவில் தெரியாது. இது தெற்கு ஆஸ்திரேலியா, பசிபிக் தெற்கு, அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். அடுத்த முழு சந்திர கிரஹணம் – 2028 டிசம்பர் 31ம் தேதி நடைபெறும்.