
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக–பாஜக தலைமையில் மாநிலத்தில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அந்த முயற்சிகளில் அமமுகவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. எனினும், சமீபகாலமாக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன.
இந்நிலையில், அதிமுக உரிமை மீட்பு குழுவை தலைமை தாங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் கவனம் ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று டிடிவி தினகரனும் அதிகாரப்பூர்வமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு மாநில அரசியலில் பல்வேறு அரசியல் கணக்குக்களை மாற்றக்கூடியதாகக் கருதப்படுகிறது.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “கூட்டணியில் நாங்கள் எதிர்பார்த்த நிலைப்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் அமையவில்லை. தமிழக மக்கள் நலனையும், அரசியல் சீரிய நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது தவிர வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் விலகல், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பாஜக முயற்சிக்கு பெரிய பின்னடைவாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதேசமயம், அடுத்தகட்டத்தில் அமமுக எதனை நோக்கி நகரும் என்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாற்றம் தமிழக அரசியலில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.