
தமிழகத்தில் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யும் நோக்கில், மின் வாரியத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கோடைகால தேவைக்கு முன்னேற்பாடு:
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடைகால வெப்பம் அதிகரிக்கும். அந்த காலகட்டத்தில் ஏர் கண்டிஷனர், பம்ப் செட், தொழிற்சாலைகள் மற்றும் பிற உபயோகங்களால் மின்சார தேவை பல மடங்கு உயரும். குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த வித தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 2026 பிப்ரவரி 1 முதல் மே 15 வரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க மின் வாரியம் முன்வைத்த மனுவை ஆணையம் பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்திற்கும் அனுமதிக்கப்பட்ட மின் வாங்கும் அளவு
ஆணையம் வழங்கிய அனுமதி விவரங்கள் பின்வருமாறு:
பிப்ரவரி 2026:
24 மணி நேரத்திற்கு தினசரி 450 மெகா வாட்
மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை உச்சநேரத்தில் 720 மெகா வாட்
மார்ச் 2026:
24 மணி நேரத்திற்கு தினசரி 950 மெகா வாட்
மாலை முதல் இரவு வரை உச்ச நேரத்தில் 1,520 மெகா வாட்
ஏப்ரல் 2026:
தினசரி 1,500 மெகா வாட்
உச்ச நேரத்தில் 2,400 மெகா வாட்
மே 2026 (1ம் தேதி முதல் 15ம் தேதி வரை):
தினசரி 1,500 மெகா வாட்
உச்ச நேரத்தில் 2,400 மெகா வாட்
மின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம்:
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள இந்த அனுமதியின் மூலம், கோடைகால வெப்பத்தில் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் போதும், பொதுமக்கள் மின்விநியோகத்தில் எந்த சிக்கலையும் சந்திக்காமல் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் காலத்தில் இடையூறு இல்லாமல் மின்சாரம் வழங்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமைய உள்ளது.