
15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார். இது பிரதமர் மோடியின் எட்டாவது ஜப்பான் பயணம் மற்றும் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் நடைபெறும் முதல் உச்சி மாநாடு ஆகும். இந்த பயணத்தின் போது, இரு பிரதமர்களும் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான சிறப்பு உலகளாவிய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பாய்வில் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புதுமை, மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும். பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளையும் அவர்கள் விவாதிப்பார்கள். இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சிறப்பு பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும்.
தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவுக்குச் சென்று தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 2017 முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) SCO-வில் உறுப்பினராக உள்ளது. 2022-23 காலகட்டத்தில் SCO-வின் தலைவர்கள் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியா தான் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.