Tuesday, October 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., கோட்டா மோசடி!

நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் என்.ஆர்.ஐ., (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்) கோட்டாவில் மோசடி செய்து 18,000 மாணவர்களுக்கு போலியான சேர்க்கைகள் வழங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது அமலாக்கத்துறை (ED). விசாரணையின் போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வங்கி வைப்புகளையும் முடக்கியுள்ளது.

நீட் தேர்வு – முறைகேடுகளுக்கான பின்வாசல்

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் ‘நீட்’ நுழைவுத் தேர்வு வழியாக மட்டுமே நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு இந்த தேர்வை கொண்டு வந்திருந்தாலும், அதனை தாண்டி சில தனியார் கல்லுாரிகள் ‘என்.ஆர்.ஐ., கோட்டா’வை தவறாக பயன்படுத்தியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போலி ஆவணங்கள் – மாணவர் சேர்க்கை

மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், முகவர்களை நியமித்து இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்த முகவர்கள், வெளிநாடு வாழும் இந்திய மாணவர்களாக காட்டி, உள்நாட்டு மாணவர்களுக்கு போலியான தூதரக ஆவணங்கள், போலி முகவரி சான்றுகள் உள்ளிட்டவற்றை தயாரித்து கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் 18,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், என்.ஆர்.ஐ., கோட்டா மூலம் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில உண்மையான என்.ஆர்.ஐ., மாணவர்களும் முகவர்கள் கொடுத்த பண ஆசைக்கு ஆளாகி, அவர்களது பெயரை போலி சேர்க்கைக்காக பயன்படுத்த அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையில் சிக்கிய ஆவணங்கள்

அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில், அமெரிக்காவில் பணிபுரியும் நோட்டரி அதிகாரிகளின் போலியான சான்றிதழ்கள், என்.ஆர்.ஐ., மாணவர் உறவினர் கட்டண சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைப்படி, என்.ஆர்.ஐ., கோட்டாவில் சேரும் மாணவர்களின் கட்டணத்தை அவர்களது வெளிநாட்டு உறவினர்கள் தான் செலுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான மாணவர்களின் கட்டணம் உள்நாட்டு முகவர்களின் வழியாகவே செலுத்தப்பட்டிருப்பது விசாரணையில் உறுதியானது.

கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் நடத்தப்பட்ட சோதனையில், 6.42 கோடி ரூபாய் வங்கி வைப்பு கணக்கில் வராதது தெரிய வந்ததால், அந்த தொகை முடக்கப்பட்டது. மேலும் பல கல்லுாரிகளில் 12.33 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சந்தேகத்திற்குரியவையாக இருந்ததால் அவற்றையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த மோசடியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்களின் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, பெரும்பாலான சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதியானது.

நடவடிக்கை எடுக்காத மாநில அரசுகள்

இந்த மோசடியைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் அதிர்ச்சி

என்.ஆர்.ஐ., கோட்டா மூலம் நடந்த இந்த மிகப்பெரிய மோசடி, மருத்துவக் கல்வியில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. “நீட் தேர்வு முறையே மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்” என மத்திய அரசு வலியுறுத்தும் நிலையில், தனியார் கல்லுாரிகளில் நடந்த இந்த மோசடி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.