Monday, October 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

சென்னையில் விடிய விடிய கனமழை – மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

சென்னை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக கொட்டிய மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னையின் கண்ணகி நகரில், மழை நீர் தேங்கிய பகுதியில் மின்சாரம் பாய்ந்து, அங்கு சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (40) உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் கனமழை

பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பாம்பல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கி, மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மழைப்பொழிவு (கடந்த 24 மணி நேரத்தில்)

சென்னையில் பதிவான மழைப்பொழிவு (மில்லிமீட்டரில்):

  • ஒக்கியம் துரைப்பாக்கம் – 209.1
  • மடிப்பாக்கம் – 184.2
  • பள்ளிக்கரணை – 175.2
  • மேடவாக்கம் – 175.2
  • பாரிஸ் – 171
  • அடையார் – 168.3
  • ஈஞ்சம்பாக்கம் – 159.3
  • கண்ணகி நகர் – 154.5
  • ராஜா அண்ணாமலைபுரம் – 149.4
  • நெற்குன்றம் – 131.4
  • கொரட்டூர் – 124.8
வானிலை மைய எச்சரிக்கை

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • தமிழகத்தின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • வடமேற்கு வங்கக்கடலில், ஒடிஷா–மேற்கு வங்கக் கரைக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
  • இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  • வரும் 28ஆம் தேதி வரை மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழைநீர் தேங்கிய இடங்களைத் தவிர்த்து செல்லவும், மின்சார சாதனங்கள் அருகே செல்லாமல் பாதுகாப்புடன் இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.