
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தொழிலதிபர் கணவர் ராஜ் குந்த்ரா மீது ₹60.48 கோடி பணமோசடி செய்ததாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
‘பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்’ என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் இயக்குநர்களாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா இருந்தனர். தொழிலதிபர் தீபக் கோத்தாரி என்பவர், 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், அந்த நிறுவனத்திற்கு மொத்தம் ₹60.48 கோடி முதலீடாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோத்தாரி அளித்த புகாரின் படி, அந்தப் பெரிய தொகையை நிறுவனம் வளர்ச்சி அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தாமல், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக திருப்பி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோத்தாரியின் குற்றச்சாட்டு: ராஜேஷ் ஆர்யா என்ற முகவரின் மூலம் அறிமுகமான ஷில்பா மற்றும் ராஜ் குந்த்ரா, 75 கோடி கடனை 12% வட்டியுடன் பெறும் திட்டத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதிக வட்டிச் சுமையைத் தவிர்க்க, அந்த தொகையை ‘முதலீடு’ எனக் காட்டி பதிவு செய்ததாகவும் கோத்தாரி புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பணம் சரியான நேரத்தில் திருப்பி வழங்கப்படும்” என்ற உறுதியும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கோத்தாரி, 2015 ஏப்ரல் மாதம் முதல் தவணையாக ₹31.95 கோடியும், பின்னர் 2வது தவணையாக ₹28.54 கோடியும் வழங்கியுள்ளார். எனினும், 2016ஆம் ஆண்டில், ஷில்பா ஷெட்டி அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பிற்பகுதியில், நிறுவனத்திற்கு எதிராக ₹1.28 கோடி மதிப்பிலான திவால் வழக்கு தொடுக்கப்பட்ட போதிலும், அதுபற்றி தமக்கு எந்த தகவலும் தரப்படவில்லை என்று கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, ஜூஹு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்கைப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.