Tuesday, October 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அனில் அம்பானி: மோசடி வழக்கு – 35க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை! முதல் கைது நடவடிக்கை!

தொழிலதிபரான அனில் அம்பானிக்கு எதிராக, மத்திய அரசின் அமலாக்கத் துறையினர் (Enforcement Directorate – ED) நடத்திய மோசடி விசாரணையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ (SBI) வங்கி, அனில் அம்பானியை மோசடியாளர் மற்றும் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து, அமலாக்கத் துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கைகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அவரது சொத்துகளுக்கும் தொடர்பான 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தினர். இந்த நடவடிக்கைகள் டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அனில் அம்பானிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அவர் பதிலளிக்க தவறினால், கட்டாய ஆஜராக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வழக்கில், அமலாக்கத்துறை தனது முதல் கைது நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் போலியான வங்கி உத்தரவாதம் பெற உதவியதாகக் கூறப்படும் ‘பிஸ்வால் டிரேட்லிங்க்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவரை ED கைது செய்துள்ளது. மேலும், அனில் அம்பானி நாட்டை விட்டு செல்லுவதைத் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ (Look Out Circular) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு நாட்டின் தொழில்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அனில் அம்பானி இந்த வழக்கில் என்ன பதில் அளிக்கிறார்? அவர் எதிர்கொள்ளும் சட்ட விளைவுகள் என்ன? என்பன தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.