Tuesday, October 14பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள்
சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை.

அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்:
இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்:
இந்தியாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை (மெத்தனால் உட்பட) இறக்குமதி செய்தது. இந்த காலகட்டத்தில், 51 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டன.

ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்:
மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை, குறிப்பாக, டோலுயீனை இறக்குமதி செய்தது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 49 மில்லியன் டாலரை விட அதிகம்.

ராமனிக்லால் எஸ். கோசாலியா & கோ:
இந்த நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் அறிக்கையின்படி, ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை இரானில் இருந்து மெத்தனால் மற்றும் டோலுயீன் போன்ற பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் 22 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்:
இந்த நிறுவனம் அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து மெத்தனால் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது. இந்த காலகட்டத்தில் மொத்த கொள்முதல் சுமார் 14 மில்லியன் டாலர். இந்த சரக்குகளில் சில துபையை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா என்ற வர்த்தக நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சன் பாலிமர்ஸ்:
இந்த நிறுவனம் இரானின் டானாய்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்திடமிருந்து பாலிஎதிலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கியதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது. அதன் மொத்த கொள்முதல் 1.3 மில்லியன் டாலரை விட அதிகம்.

“அமெரிக்காவின் புதிய தடைகள் இரானின் எண்ணெய் வர்த்தகத்தை பாதித்து, அதன் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் கெடுக்கும் தீய நோக்கம் கொண்டவை. இந்த ஒருதலைப்பட்சமான, சட்டவிரோத தடைகள், குற்றச் செயலாகும். இவை சர்வதேச சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுகின்றன. இவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.