
மத்திய கிழக்கில் நீடித்துவரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு முக்கியமான முன்னேற்றமாக, கனடா அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனை கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று தெரிவித்தார், “செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் (UN) பாலஸ்தீன அரசை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவேண்டும் என்பதே கனடாவின் நிலைபாடாகும்”.
“இரு நாடுகளுக்கும் சமநிலை வேண்டும்” — கார்னியின் வலியுறுத்தல்
மார்க் கார்னி தனது உரையில், இஸ்ரேலின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கனடா உறுதியாக ஆதரிக்கிறது என்றும், அதே நேரத்தில் பாலஸ்தீனமும் ஒரு சுயாதீன, இறையாண்மை உடைய நாடாக அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் உரிமை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது என்றும், தற்போது நிலவும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான நேரம் என்றும் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நேரத்தில் கனடா அரசு எடுத்துள்ள முடிவு ஹமாஸுக்கு ஒரு வெகுமதி போல் அமையும். இது, போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும், பிணைக்கைதிகள் விடுதலையின் கட்டமைப்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் மற்றும் ஒரு நாடு!
பாலஸ்தீனை அங்கீகரிக்க தீர்மானித்துள்ள நாடுகளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஏற்கனவே முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், கனடா அவர்களின் கூட்டணியில் சேர்ந்திருப்பது, உலகளாவிய அரசியல் சுழற்சியில் புதிய பரிணாமத்துக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக நிலவிவரும் இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலுக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வு தேவைப்படும் நிலையில், முக்கிய மேற்கத்திய நாடுகளின் இந்த அங்கீகாரம், பாலஸ்தீனின் அரசியல் அங்கீகாரத்திற்கும், அதன் அதிகாரபூர்வ நாடாக உருவாகும் முயற்சிக்கும் முக்கிய வழிகாட்டியாக இருக்கக்கூடும்.