Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 3 பேர் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பேடன்-வுர்டெம்பெர்க் மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு பெரும் விபத்துக்கு ஆளானது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், 34 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளை மிரளவைத்த திடீர் விபத்து

பிபெராச் (Biberach) மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த ரயில் இன்று காலை தண்டவாளத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் ரயிலின் பல பெட்டிகள் மரங்களில் மோதியதால், கடுமையாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை, மருத்துவ குழுவினர் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

3 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்

இவ்விபத்தில் தற்போது வரை மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலச்சரிவு காரணமா? விசாரணை தொடருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால்தான் இந்த விபத்து நடந்ததா என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தின் நிலைமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிபர் பிரீட்ரிச் மெர்ஸின் இரங்கல்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜெர்மன் அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிபெராசில் நடந்த ரயில் விபத்து எனக்கு மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இது போன்ற நேரத்தில் நமது கடமை, மக்கள் உயிருக்கு முன்னுரிமை அளிப்பதுதான்,” எனக் கூறியுள்ளார்.

அதோடு, “நான் உள்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்களுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறேன். மீட்பு பணிகள் விரைவாக நடைபெறுமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் தக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவிகள்

ரயில் சேவைகளில் ஏற்பட்ட தடை மற்றும் பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர். சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த துயர சம்பவம் ஜெர்மனியின் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. தொடர்ந்து கனமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், ரயில்வே பாதைகளில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.