
இஸ்ரேல் அரசு காஸாவில் மேற்கொண்டு வரும் உணவுப் பொருள் விநியோக முறை அபாயமாகவும், மனிதாபிமானக் கொள்கைகளை மீறுவதாகவும், இது அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற செயலாகவும் உள்ளதாக “24 நாடுகளின் கூட்டமைப்பு” கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கண்டன அறிக்கையில் பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கலந்து கொண்டுள்ளன. “காஸாவில் நடைபெறும் போர் உடனடியாக நிறைவு பெற வேண்டும். அங்கு வாழும் பொதுமக்களின் துயரம் ஏற்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மக்கள், குறிப்பாக குழந்தைகள் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற போராடும் சூழ்நிலையில், இஸ்ரேல் அரசு மேற்கொள்ளும் உணவு விநியோகக் முறைகள் அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன,” என்று அறிக்கையில் கண்டிக்கப்படுகிறது.
மேலும், “காஸா மக்களின் கௌரவத்தையும் மனித உரிமையையும் பறிக்கும் வகையில் நடைபெறும் இஸ்ரேலின் செயல்பாடுகள் எங்களது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. மக்கள் சாப்பாடு கேட்டால், அவர்களைக் கொல்லக்கூடிய சூழல் ஏற்படுவது மனிதாபிமானத்திற்கு எதிரானது. இது நியாயமானதாக எப்படியும் கருத முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உணவுப் பொருள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு உடனடியாக நீக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பும், பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பாதுகாப்பாகவும் திறமையாகவும் அவர்களது நிவாரண பணிகளைச் செய்யச் சுற்றுச்சூழல் உருவாக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ள முக்கிய நாடுகள்:
பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லிதுவேனியா, லக்ஸம்போர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், மற்றும் ஸ்விட்சர்லாந்து.
இதனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமத்துவம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு பல நாடுகள் திறந்தவெளியாகக் கண்டனம் தெரிவித்துள்ளமை, காஸா மக்களின் மனித உரிமைகள் மீதான உலகின் கவலையை பிரதிபலிக்கிறது.
