Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 14) அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி திரண்டனர்.

சமீபத்தில் ரூ.2.37 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜூலை 10ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலை 7ம் கால பூஜை நடைபெற்ற பின்னர், இரவில் மூலவர்களுக்கு காப்பு கட்டும் சடங்கும் நடந்தது.

இன்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பின்னர் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசம், மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று முடிந்தது.

அதன்பின், 4.30 மணியளவில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

பின்பு ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில் கோயிலின் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா!” என்ற கோஷங்கள் வானளாவக் கேட்டன.

பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யும் வகையில், கோயிலுக்குள் செல்லும் பாதையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. நகரின் முக்கிய இடங்களில் 26 மெகா எல்.இ.டி. திரைகள் மூலம் நேரலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. 3,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் மூர்த்தியின் சார்பில், திருமண மண்டபங்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குட்பட்ட ஏற்பாடுகளாக, 10 இடங்களில் முதலுதவி மையங்கள், நடமாடும் கழிப்பறைகள், கிரிவல பாதையில் குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை செய்து வைக்கப்பட்டிருந்தன.

அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தலைமையில், பக்தர்களுக்கு மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கயிறு, மூலவர் படம், விபூதி மற்றும் இனிப்புகள் அடங்கிய பிரசாத பாக்கள் வழங்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்தனர். இன்று மாலை 6.30 மணிக்கு அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் ஆகியோரின் வீதியுலா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.