
வருமானத்தை விட அதிகமாக ரூ.2.73 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக தேனி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் அவரது மனைவி பிளாரன்ஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ஏகராஜ் (வயது 58), 10 மாதங்களுக்கு முன் தேனி நகராட்சியின் கமிஷனராக பணியேற்றிருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள இவர், முந்தைய காலகட்டங்களில் பல்வேறு நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவி பிளாரன்ஸ் (வயது 50) சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஏகராஜ் 1994ம் ஆண்டு எரிசக்தித் துறையில் தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்தவர். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிப்புரிந்த பிறகு, 2017ம் ஆண்டு நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் தலைமைச் செயலகம் உட்பட நாகபட்டினம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஊட்டி ஆகிய நகராட்சிகளில் கமிஷனராக பணியாற்றியுள்ளார்.
ஏகராஜ் மீது 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ம் ஆண்டு ஜூன் வரை பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூலை 1 மற்றும் 3ஆம் தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள அவரது அரசு குடியிருப்பு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி, ஏகராஜ் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற முறையில் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது பெயரில் நேரடி சொத்து சேர்க்கைகள் மட்டுமல்லாது, மனைவி மற்றும் குடும்பத்தினரின் பெயர்களிலும் பெரும் அளவில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குவிக்கப்பட்ட சொத்துகளின் விவரம்:
- – சென்னை போரூரில் அவரது மனைவியின் பெயரில் ரூ.85 லட்சம் மதிப்பிலான வீடு
- – மகனுக்கும் மகளுக்கும் மருத்துவக் கல்விக்காக ரூ.1.5 கோடி செலுத்தல்
- – ரூ.50 லட்சம் மதிப்பிலான நான்கு கார்கள்
- – ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்
- – மகளின் திருமணத்துக்காக ரூ.15 லட்சம் செலவு
வருமானம் மற்றும் சொத்து விகிதம்:
2019 முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏகராஜுக்கு அரசு ஊழியராக இருந்தபோது ரூ.1.33 கோடி மட்டுமே வருமானமாக இருந்தது. ஆனால், இவர் சேர்த்த சொத்து மதிப்பு ரூ.2.73 கோடியை எட்டியுள்ளது. இது அவரது அரசாங்க வருமானத்தை விட “205 சதவிகிதம் அதிகம்” என்பது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமத்ரா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.