
உக்ரைன் மீது 2022ல் தொடங்கிய போரை நிறுத்த, உலக நாடுகள் மற்றும் அமைப்புகள் பல தடவைகள் முயற்சி மேற்கொண்டும், ரஷ்யா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை. இதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற அக்கறை மீண்டும் தலைதூக்கியது. தன்னுடைய ஆட்சியின் ஆரம்ப நாளிலிருந்தே டிரம்ப், இந்த போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் புடினுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. உரையாடலின் முக்கிய அம்சம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதை பற்றியது.
புடின் திட்டவட்டம்:
உக்ரைனில் தமது முக்கிய இலக்குகளை அடையும் வரை ரஷ்யா போரில் இருந்து பின்வாங்காது என அதிபர் புடின் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம்:
உக்ரைன் விவகாரம் மட்டுமின்றி, ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரச்சினைகள் குறித்தும் இந்த அழைப்பில் விவாதிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவுத் துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறினார். அவர் கூறியதாவது: “இரு தலைவர்களும் மத்திய கிழக்கு நிலைமையை, குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள பதற்றங்களை விரிவாக பேசினர். ஈரான் பிரச்சினைகள் இருதரப்பு மற்றும் சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் சமாதானமாக தீர்க்கப்பட வேண்டும் என்றே புடின் வலியுறுத்தினார். அதேபோல, உக்ரைனில் நடைபெற்றுவரும் சண்டையை விரைவில் நிறுத்துவதற்காக, தனது முயற்சிகளை டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால், ரஷ்யா தனது இலக்குகளை அடைய முனைப்புடன் செயல்படும் என்ற நிலைப்பாட்டில் உறுதி வைத்திருக்கிறது.”
இந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்கா இருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களைக் குறைப்பது குறித்த எவ்வித ஆலோசனையும் இடம்பெறவில்லை என உஷாகோவ் தெளிவுபடுத்தினார்.
மூன்று ஆண்டுகளை கடந்தும் உக்ரைன் போர் தொடர்வது உலகத்தின் பொருளாதாரம், எரிசக்தி விலை, மனிதாபிமான நிலைமை உள்ளிட்ட பல அம்சங்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா தனது இலக்குகளை அடையும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்ற புடின் பேச்சு, சர்வதேச மட்டத்தில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.