Tuesday, July 1பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

70க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்த உக்ரைனின் ஆபரேஷன் “ஸ்பைடர்வெப்”.

ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் மீது உக்ரைனின் “ஸ்பைடர்வெப்” ட்ரோன் தாக்குதல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது என்று அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) உக்ரைன் ரஷ்ய எதிரி எல்லைக்குள் ஒரு ரகசியமான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தது. 70க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்த உக்ரைனின் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் “சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இராணுவ சாதனைகளில் ஒன்றாகும்” என்று அமெரிக்க செனட்டர் கூறியுள்ளார்.

“இந்தத் தாக்குதல்களின் திறமை மற்றும் துணிச்சலைப் பொறுத்தவரை, இது ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பேஜர் நடவடிக்கையுடன் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இராணுவ சாதனைகளில் ஒன்றாக மதிப்பிடப்படும்,” என்று புளூமெண்டல் கூறினார்.

117 ட்ரோன்கள் ரஷ்யாவிற்குள் அனுப்பட்டதாகவும், உக்ரைன் எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறைந்தது நான்கு பிராந்தியங்களில் உள்ள விமானநிலையங்களை ஒரே நேரத்தில் தாக்கியதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ஸ்பைடர்வெப் 18 மாத திட்டமிடலின் விளைவாகும், மேலும் ரஷ்யாவிற்குள் இந்த ட்ரோன்கள் சரக்கு வாகனங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு அனுப்பப்பட்டன. இந்த நடவடிக்கையை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் SBU தலைவர் வாசில் மாலியுக் ஆகியோர் மேற்பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சிறப்பு தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் இழப்பு என்று உக்ரைன் கூறியுள்ளது. சுமார் 70க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது, 2 நாட்கள் ஆகியும் நெருப்பு இன்னும் அணையவில்லை என்று அறியப்படுகிறது.

“பெலியா”, “டயாகிலோவ்” மற்றும் “ஒலினியா” ஆகிய ரஷ்யாவின் வான் படை தளங்கள், பரந்த அளவில் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல் இருந்தன. இந்த அம்சத்தை கூர்மையாக கவனித்த உக்ரைன், விமானம் வழியாக அந்த இடங்களை எட்ட முடியாது என்பதையும் அறிந்து கொண்டது.

அதனால், சந்தேகம் எழக்கூடாத வகையில், சாதாரணப் பொருட்கள் அனுப்பும் போல் ஒரு கண்டெய்னரை அனுப்பியது. குறிக்கப்பட்ட இலக்கை அடைந்தவுடன், அந்த கண்டெய்னரின் கதவுகள் தானாகவே (ஆட்டோமேட்டிக்காக) திறக்க, உள்ளிருந்த ட்ரோன்கள் வானில் பாய்ந்து மூன்று வான் தளங்களையும் அதிரடியாக தாக்கின.

இதனால், ரஷ்ய வான் படையின் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும், தாக்குதலின்போது ஒரு ட்ரோன், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதன் கட்டளை மையத்திற்கு அனுப்பியது. இன்னொரு ட்ரோன், தாக்குதலை முடித்தவுடன் தன்னை அனுப்பிய கண்டெய்னரையே அழித்து, தடயமின்றி ஒழித்தது. எந்தவித தடையும் இல்லாமல், இந்த தாக்குதலை உக்ரைன் மிகச் சிறப்பாக நிறைவேற்றியது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட அந்த ட்ரோன்கள், கட்டடங்களைத் தாக்கவில்லை; வலுவான குறி வழிநடத்துதலுடன், விமானங்களையும் ஆயுத களஞ்சியங்களையும் மட்டும் தான் தாக்கின. தாம் எதைத் தாக்க வேண்டுமென்பதையும், எப்போது தாக்க வேண்டுமென்பதையும் இந்த ட்ரோன்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில், ரஷ்யா மிகுந்த பதட்டத்தில் உள்ளது. புடின் எப்போது கடுமையான நடவடிக்கையில் இறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரிட்டன் தன் படைகளை உச்ச அலெர்ட் நிலையில் வைத்துள்ளது. நேட்டோவும் உச்ச கட்ட அலெர்ட் நிலையில் செயல்பட தொடங்கியுள்ளது.