
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வேளாண் வளர்ச்சி 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாகும். இதைத் தொடர்ந்து, மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, ₹1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
2012 முதல் 2021 வரை சராசரியாக 1.36% அளவிலிருந்த வேளாண் வளர்ச்சி, திமுக ஆட்சி தொடங்கிய 2021 முதல் 2024 வரையில் 5.66% ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது.
முக்கிய பயிர்களின் உற்பத்தி சாதனைகள்
முதலிடம்: கேழ்வரகு, கொய்யா
இரண்டாம் இடம்: மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள்
மூன்றாம் இடம்: வேர்க்கடலை, தென்னை
2020-21 ஆம் ஆண்டில் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 2023-24-இல் 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
நீர்நிலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாடு:
5,427 கிமீ நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
8,540 சிறுபாசனக் குளங்கள் தூர்வாரப்பட்டன.
2,382 புதிய பண்ணைக்குட்டைகள் மற்றும் 2,474 ஆழ்துளை / குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன.
கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: 10,187 கிராமங்களில் ₹786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலம் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டது.
இ-விற்பனை மேம்பாடுகள்: 213 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்துடன் இணைக்கப்பட்டு, ₹6,636 கோடி மதிப்பிலான 22.71 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
இயந்திரமயமான வேளாண் வளர்ச்சி:
₹499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
₹96.56 கோடி மதிப்பில் 1,205 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்பட்டன.
1,652 புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இ-வாடகை மையங்கள் வழியாக 69,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் மேம்பாடு:
27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ₹1,212 கோடியில் சீரமைக்கப்பட்டன.
814 சிறுபாசன ஏரிகள் ₹75.59 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன.
24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ₹519 கோடியில் கட்டப்பட்டு, நிலத்தடி நீரின் நிலைத்தன்மைக்கு உதவியாக இருக்கின்றன.
தமிழக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் வேளாண் துறையில் எடுத்த நடவடிக்கைகள் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையிலும், உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையிலும் பயனளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.